அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கரூர் மாவட்டம் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை மேற்கொண்டுள்ளனர். நேற்று நடைபெற்ற சோதனையில் அவரது ஆதரவாளர்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், வருமான வரித்துறை அதிகாரிகள் காயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற சோதனையில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு, மத்திய துணை ராணுவப் படையினர் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இதேபோன்று, கருர் மாவட்டம் வடக்கு காந்தி கிராமத்தில் உள்ள பிரேம்குமார் மற்றும் ஷோபனா தம்பதியர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் வடக்கு காந்தி கிராமம் EB காலணி பகுதியில் உள்ள முத்துகுமார் என்பவரின் வீட்டிலும், மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்புடன், வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : வெப்ப சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!
கரூர் மாவட்டம் பரமத்தி அருகே காட்டுமுன்னூரில் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். தங்கராஜ் என்பவர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில்,100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான கோவை கோல்டு விங்ஸ் பகுதியை சேர்ந்த செந்தில் கார்த்திகேயன் வீடு மற்றும் அலுவலகத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோன்று கோவை ரேகோர்ஸ் பகுதியில் உள்ள அரவிந்த் மற்றும் அவரது மனைவி காயத்ரி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான வீடு, மறுவாழ்வு இல்லம், மற்றும் கோழிப்பண்ணை உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் திண்டல் சக்தி நகரை சேர்ந்த சச்சிதானந்தம் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை மேற்கொண்டுள்ளனர். இவர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் என்பதும், டாஸ்மாக் கடைகளுக்கு சரக்குகளை கொண்டு செல்லும் லாரி ஒப்பந்ததாரர் என்பதும், மாநில அளவில் இவர் ஒருவர் மட்டுமே டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சோதனையில் 2 கோடி ரூபாய் ரொக்கம், மடிக்கணினி, டைரி மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.