இடைத்தேர்தலில் களமிறக்கும் சீமான்! “நான் பொதுவேட்பாளர்…” - யாருடன் கூட்டணி?

இந்நிலையில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக சீமான் அறிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் களமிறக்கும் சீமான்! “நான் பொதுவேட்பாளர்…” - யாருடன் கூட்டணி?
AI Generated Image
Published on: 
Updated on: 
2 min read

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை வேட்பளராக அறிவித்துள்ளார். இதற்கிடையே, செய்தியாளர்கள் சந்திப்பில் தவெக அரசின் திட்டங்கள், கடன் சுமை மற்றும் செஞ்சி சிறுமி மாயமான விவகாரம் குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

2026 பொது தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். இவருடன் சேர்த்து மொத்தம் 6 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 6 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் எதிர்பார்ப்பு நிலவியது. அதன்பின்னர் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதியில் இந்த மாதம் 6ம் தேதி இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இரு தொகுதியிலும் ஆளும் கட்சியான தவெக வெற்றி பெற்றது.

வரவிருக்கும் ஐந்து சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று தெரிவித்த சீமான், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தானே போட்டியிடப் போவதாக அறிவித்தார். மேலும் நவம்பர் 27ஆம் தேதி முதல் தேர்தல் பணிகளைத் தொடங்க உள்ளதாகவும், அம்பாசமுத்திரம் தொகுதியில் பணம் கொடுக்காமல் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி எழுவதாகவும் அவர் கூறினார்.

மேலும், தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்று தான் விரும்புவதாகவும், தன்னை எப்படியாவது சட்டமன்றத்திற்குள் செல்லவிடாமல் தடுக்க வேண்டும் என்று விஜய் நினைப்பதாகவும் சீமான் விமர்சித்தார்.

அம்பாசமுத்திரம் தொகுதிக்கு இதுவரை இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக சீமான் அறிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், “சொந்த பந்தம் என்று பார்த்தால் தமிழ்நாட்டில் எந்தத் தொகுதியிலும் என்னால் போட்டியிட முடியாது. உறவுகள் வேறு, அரசியல் நிலைப்பாடுகள் வேறு. நான் எப்போதுமே பொதுவேட்பாளர். அனைத்து சமூகத்தினருக்கும், அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “திரைக் கவர்ச்சி மங்கும்… இன எழுச்சி பொங்கும்!” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் திட்டங்கள் குறித்துப் பேசிய சீமான், பல்வேறு திட்டங்கள் கடன் வாங்கிச் செயல்படுத்தப்படுவதாக விமர்சித்துள்ளார். ஏற்கெனவே தமிழ்நாட்டுக்கு சுமார் ரூ.13 லட்சம் கோடி கடன் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மேலும் கடன் வாங்கித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசின் திட்டங்களை வெற்று அறிவிப்புகள் மற்றும் கவர்ச்சி அறிவிப்புகள் எனவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், ஆட்சி மாறினாலும் ஆட்சி செய்யும் முறை மாறவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. பொது தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி கூட்டணி குறித்து எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com