நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011ம் ஆண்டு புகார் அளித்திருந்தார். பின்பு இது வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில், இதனை ரத்து செய்யக் கோரி சீமான் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இது தொடர்பாக விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், புகார் அளித்த நடிகையே அதனை வாபஸ் பெற்றாலும், சீமான் மீது பாலியல் துன்புறுத்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளதால், இதனை ரத்து செய்ய முடியாது என்றும், காவல்துறை இதுகுறித்து விசாரணை நடத்தி, 12 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்காக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சீமானுக்கு போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று அவர் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், நாளை காலை 11 மணிக்கு மீண்டும் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அளிக்கப்பட்டது.
இந்த சம்மனை சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய நிலையில், அதனை சீமான் வீட்டின் காவலாளி உடனே கிழித்தெறிந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், மீண்டும் வீட்டிற்குள் நுழைய முற்பட்டபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது காவலாளி அமல்ராஜிடம் கைத் துப்பாக்கி இருந்ததை கண்டு அதிர்ந்த போலீசார், அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று ஜீப்பில் ஏற்றி, துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், வீட்டுக் காவலாளி அமலராஜ் முன்னாள் ராணுவ வீரர் என்பதால் அவர் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. எனினும், அந்த துப்பாக்கி உரிய அனுமதி இருக்கிறதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாளை காலை சீமான் நிச்சயம் ஆஜராக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒருவேளை நாளை அவர் ஆஜராகவில்லை எனில், கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று ஓசூரில் பேட்டியளித்த சீமான், "நான் ஏற்கனவே இந்த வழக்கு குறித்து போலீஸ் முன்பு ஆஜராகியிருக்கிறேன். இப்போதும் மீண்டும் மீண்டும் என்னை ஆஜராக வைத்து அசிங்கப்படுத்த நினைக்கிறது திமுக அரசு. நாளை நான் கண்டிப்பாக ஆஜராக மாட்டேன். உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்" என்று போலீசாருக்கு நேரடியாக சவால் விடுத்திருக்கிறார்.