தமிழ்நாடு அரசியலில், அண்மைக் காலமாக நடிகர் விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இடையேயான அரசியல் மோதல் பேசுபொருளாகியுள்ளது. விஜய், தனது கட்சியின் மாநாட்டில் பேசிய பேச்சுக்கு, சீமான் தனது வழக்கமான பாணியில் கிண்டலாகவும், கூர்மையாகவும் பதிலளித்துள்ளார். குறிப்பாக, விஜய் முதல்வரை 'அங்கிள்' என்று அழைத்ததும், அவரது ரசிகர்களை சீமான் மறைமுகமாக 'அணில்' என்று குறிப்பிட்டதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநாட்டில் விஜய் பேசியது என்ன?
மதுரையில் நடைபெற்ற 'தமிழாக வெற்றி கழகம்' கட்சியின் மாநாட்டில், விஜய் அரசியல் தலைவர்கள் பலரையும் விமர்சித்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பலமுறை "ஸ்டாலின் அங்கிள்" என்று குறிப்பிட்டுப் பேசினார். இது பல அரசியல் தலைவர்களால் விமர்சிக்கப்பட்டது.
அதேபோல், "எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அந்த கட்சியை, கட்டிக்காப்பது யார்? அந்தக் கட்சி இப்போது எப்படி இருக்கிறது? நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியனுமா என்ன?" என்று அ.தி.மு.க.வின் தலைமை குறித்தும் கேள்வி எழுப்பினார். மேலும், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி பொருந்தாத கூட்டணி என்றும் விமர்சித்தார்.
அதுமட்டுமின்றி, தான் காட்டுக்கே சிங்கம் என்றும், சிங்கம் கெட்டுப் போனதை என்றும் தொடாது என்றும் விஜய் கூறியிருந்தார். இது மறைமுகமாக சீமான் மற்றும் அவரது கட்சியினரை குறிப்பிட்டு விஜய் பேசியதாகவே பார்க்கப்படுகிறத்து.
சீமானின் கூர்மையான கேள்வி:
இந்நிலையில் செய்தியாளர்கள், விஜய்யின் பேச்சு குறித்துச் சீமானிடம் கேள்வி எழுப்பியபோது, "அணில் ஏன் 'அங்கிள் அங்கிள்' எனக் கத்துகிறது? அது 'JUNGLE JUNGLE' என்று தானே கத்த வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார். இந்த பதில், கூட்டத்தில் இருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
விஜய், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறியது குறித்த கேள்விக்கு, சீமான் தனது பாணியில் பதிலளித்தார். "அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது என்பதால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறுகிறார் விஜய்" என்று சீமான் கிண்டலாகப் பேசினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.