தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலேயே இதுவரை காணாத தனித்துவமான தேர்தலாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் பலவும், மாநாடு, உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி வேலை என முனைப்போடு இயங்கி வருகின்றன.
அந்த வகையில் புது வரவான தமிழக வெற்றி கழகம் தனது 2 -ஆவது அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. இந்த பக்கம் நாதக கட்சி தலைவர் சீமான் சீமானும் ஆடு,மாடு மாநாடு, மரங்களின் மாநாடு என நூதனமாக மாநாடுகளை நடத்தி வருகிறார்.
ஆனால் கொஞ்ச நாட்களாக சீமான் விஜய் -யை கடுமையாக விமர்சித்து வருகிறார். இத்தகு காத்திரமான விமர்சனத்திற்கு காரணம் என்ன? இதனால் ஏற்படும் தாக்கம் என்ன என்பதே தற்போது பேசுபொருள் ஆகியுள்ளது.
ஏற்கனவே விழுப்புரம் பொதுக்கூட்டத்தில்,“தமிழக வெற்றி கழக தொண்டர்களிடம் உங்கள் கொள்கை என்னவென்று கேட்டால், தளபதி, தளபதி, தளபதி என்பார்கள்.. ஆனால் எனக்கு தலைவிதி..தலைவிதி என கேட்கிறது. செரி பா உங்கள் கொள்கைதான் என்ன!? என்று கேட்டால் அவர்களுக்கு தெரியாது. சரி சரி..எதற்காக வந்தீர்கள் என்று கேட்டால், TVK tvk என கத்துகின்றனர், ஏன்டா டீ விக்கவா இவ்வளவு தூரம் வந்தீர்கள்..செரிங்க பா ஓரமா போய் டீ வித்துக்கோங்க பா ” என பேசி பகீர் கிளப்பியிருந்தார்.
இதனை தொடர்ந்து மதுரையில் மரங்களின் மாநாட்டில் பேசிய சீமான், “திரை போதை சாதி, மத போதைக்கு இணையானது. இந்த காட்டுக்குள் புலிகள் நுழைந்த உடனேயே ஒரு அணில் கூட கண்ணில் படவில்லை. அணில்களுக்கும் சேர்த்து தான் காடுவளர்க்க நாம் பாடுபடுகிறோம்” என பேசியிருந்தார். குறிப்பிட்ட கூட்டங்கள் மட்டுமின்றி கிடைக்கும் மேடைகளில் எல்லாம் சீமான் விஜயை மோசமாக கலாய்த்து வருகிறார்.
நோக்கம் என்ன
விஜய் முதன் முதலில் அரசியல் பிரவேசத்தை அறிவித்தபோது, அவரோடு கூட்டணி வைக்கவே சீமான் விரும்பினார். ஆனால் கொள்கை தலைவராக பெரியாரை அறிவித்த உடன் சீமான் பின் வாங்கிக்கொண்டார்.
மேலும் விஜய் -ன் அரசியல் பிரவேசத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட கூடிய கட்சிகளில் நாம் தமிழர் கட்சியும் ஒன்று. ஏனெனில் விஜய் ஆட்சியை பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பை விட யாருடைய ஓட்டை கணிசமாக உடைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்புதான் வலுத்து வருகிறது. அவரின் நட்சத்திர முகம் அவருக்கு தேர்தல் சமயத்தில் நிச்சயம் கைக்கொடுக்கும் என்று நம்பலாம். அந்த அச்சம் கூட சீமானுக்கு எழுந்திருப்பதாகவே தெரிகிறது.
இரண்டாவது விஜய் -ன் தொண்டர்கள் இன்னமும் அரசியல்படவில்லை. அவர்கள் இன்னும் ரசிகர்களாவே இருக்கின்றனர். தவிர எந்த களப்பணியும் செய்யாத ஒரு நபரை ‘மிகப்பெரும் நட்சத்திர முகம்’ என்ற ஒரு காரணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கும் போக்கு சரியானதல்ல.
அவர்கள் போராடி மக்களோடு மக்களாக களத்தில் நின்று பண்பட்ட அரசியல் செய்ய வேண்டும். இவர்கள் எத்தகு ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்களோஅதற்கு அவர்களும், அந்த தலைவரும் கடுமையான உழைப்பை தர வேண்டும். இந்த போக்கில் அணுகினால் சீமான் சொல்லுவதை ஒரு பக்கம் நம்மால் ஏற்றுக்கொள்ள இயலும்.
ஆனாலும் ‘அணில்’ என விமர்சிப்பதும் அதற்கு பதிலடியாக ‘கெட்டுப்போனதை தொடமாட்டோம்’ என விஜய் சொல்லுவதும் நாகரீகமான அரசியல் அல்ல.
“தவெக தொண்டர்கள் ‘விஜய்’ மீது கொண்டிருக்கும் திரை மோகத்தால் மட்டுமே அவருக்கு வாக்களிக்க முன்வந்துள்ளனர். எந்த சித்தாந்தமாக இருந்தாலும் சரி, ஏதேனும் ஒரு தெளிவான சித்தாந்தத்தை, அரசியல் பிடிப்பை இன்னும் தவெக கைக்கொள்ளவில்லை. அவர்கள் அரசியல்படுத்தப்படவில்லை என்பதே நிதர்சனம். அவர்களுக்கு கொள்கை எல்லாம் முக்கியம் இல்லை. ஒரே ஒரு முறை விஜய் -யை சந்தித்தால் போதும். அதற்கு மதுரை மாநாடு தான் மிகப்பெரும் சாட்சி. இந்த ‘ரசிகர்’ மன நிலையோடு அவர்கள் தேர்தலை அணுகுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. இந்த போக்கு தமிழகத்தில் பலகாலமாக வேரூன்றி போயிருக்கும் அரசியல் சிந்தாந்தங்கள் அனைத்தையும் நீர்த்துப்போக செய்யும். அது வலதாக இருந்தாலும் சரி இடதாக இருந்தாலும் சரி. இதனைத்தான் சீமானும் எல்லா மேடைகளிலும் “நீ எனக்கு ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்ல… ஆனால் யாரை தலைவனாக ஏற்கிறாய் என்பதை யோசி” என தொடர்ந்து பேசி வருகிறார். வரும் நாட்களில் இவர்களின் சித்தாந்தம் குறித்தும், அரசியல் முதிர்ச்சி குறித்தும் சீமான் நிச்சயம் கடுமையான விமர்சனங்களை முன் வைக்க கூடும், அப்போது அவற்றை தவெக தலைவரும் தொண்டர்களும் எப்படி ஏற்க போகிறார்கள். அரசியல் பக்குவதோடு செயல்படுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.