

சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக அரசு மீது விமர்சனங்களை முன்வைத்தார். சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் அன்பில் மகேஷ் கைது குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
சிவகங்கையில் குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதற்கு ஒரு கேள்விக்கு, "நான் மண்ணின் மகன் என்பது இப்போது தெரிகிறது. என்னை நான்கு தொகுதியிலும் தோற்கடித்துவிட்டு, இங்கே குற்றம் சம்பவங்கள் அதிகரித்துவிட்டது என்றால்..
எனக்கே என் ஊருக்குள் வர வெட்கமாகவும் அவமானமாகவும்தான் இருக்கிறது. ஒவ்வொரு போராட்டத்திலும் வந்து நின்றேன், நம்முடைய வரலாறு எல்லாம் எடுத்துப் பேசினேன். பெத்த தாய் தந்தையே பிள்ளைக்கு சோறு ஊற்ற வில்லை என்றால், ஊரானா வந்து ஊத்துவான்.
இந்த பிரச்சனை எல்லாவற்றையும் சரி பண்ணுவோம். இன்னைக்கு இல்லன்னா நாளைக்கு." என்றார்.
அன்பில் மகேஷ் கைது குறித்த கேள்விக்கு, "கடந்த ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை, குற்றச்சாட்டு இல்லை என்று நாம் சொல்லிவிட முடியாது. அதற்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படும் போது அதை கேள்வி கேட்க முடியாது
ஏன் நடவடிக்கை எடுத்தீங்க என்று கேட்க முடியாது." என்றார்.
தவெக அரசு மீதான குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, "இந்த ஆட்சி முடிந்து என்னை போல ஒருத்தர் வந்து அவர்களது ஃபைல்களைத் திறக்கும்போதுதான் எல்லாம் தெரியும்... வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல் நடந்ததா இல்லையா?" எனக் கேள்வி எழுப்பினார்.
அத்துடன், "பணமா கொடுப்பதுதான் லஞ்சம் எனக் கூறினீர்கள் என்றால் ஒன்றும் செய்ய முடியாது. 2500 ரூபாய் தருகிறேன், தாலிக்கு 8 கிராம் தங்கம் தருகிறேன், அண்ணன் சீர் தருகிறேன் தாய்மாமன் சீர் தருகிறேன் 6 சிலிண்டர் தருகிறேன் என சொல்வது லஞ்சமா இல்லையா? மக்கள் பணத்திலிருந்து மக்களுக்கு எடுத்துக் கொடுப்பதை அன்பளிப்பு என சொல்ல முடியாது. இது வார்த்தை லஞ்சம்.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவேன் என்று சொல்வது அரசின் கடமை. ஆனால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 4000 தருவேன் என்று சொல்வது லஞ்சம்." என்றார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்