அரசு கைகட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுங்கள்!! சீமான் கோரிக்கை

தனியார் பெருமுதலாளிகள் தங்களது இலாபநோக்கத்திற்காக தமிழக இளைஞர்களின் உயிரோடு விளையாடும் ஆபத்தானப் போக்கினை, அரசு கைகட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்காமல் உடனடியாக அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகள் இயங்க தற்காலிகமாகத் தடைவிதிக்க உத்தரவிட வேண்டும்
அரசு கைகட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுங்கள்!! சீமான் கோரிக்கை
Published on
Updated on
2 min read

கொரோனா நோய்த்தொற்றுப் பாதிப்புக்குத் தொழிலாளர்கள் அதிகப்படியாக உள்ளாகும் தற்போதையப் பேராபத்தான நிலையில் அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகள் இயங்க தற்காலிகமாகத் தடைவிதிக்க வேண்டும்! நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு நடைமுறையிலிருக்கும் தற்காலச்சூழலில், அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகள் இயங்க அனுமதியளித்திருப்பதும், அதன் விளைவாகத் தொழிலாளர்கள் அதிகப்படியாக நோய்த்தொற்றுக்கு ஆளாவதும் அதிர்ச்சியளிக்கிறது. வணிகமும், இலாபமும் மட்டுமே நோக்கமாகக் கொண்ட தொழிற்சாலைகளின் தன்னல முடிவுக்கு ஒத்திசைந்து, அவைகள் இயங்க அரசு அனுமதித்திருப்பது உழைக்கும் தொழிலாளர்களின் உயிருக்கு உலைவைக்கும் கொடுஞ்செயலாகும்.

கொரோனா நோய்த்தொற்றுப் பரவலும், பாதுகாப்பின்மையும் இருப்பதாகத் தொழிலாளர்கள் போராடியதையடுத்து கண்துடைப்பிற்காக ஒருவாரம் மூடப்பட்டிருந்த குண்டாய், ரெனால்ட் நிசான் போன்ற தொழிற்சாலைகள், கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகிய தங்களது தொழிலாளர்களில் ஒருவர் இன்று இறந்தநிலையிலும் மீண்டும் இயங்கத் தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

முழு ஊரடங்கு காரணமாக வணிக நிறுவனங்கள் முதல் தெருவோரக் கடைகள் வரை அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொதுப்போக்குவரத்து முதல் தனியார் போக்குவரத்துவரை யாவும் நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிகள் முதல் பல்கலைக்கழங்கள் வரை காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. திருமணம், இறப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்குச் செல்வதற்குக்கூட அரசின் அனுமதி பெற வேண்டிய தேவையுள்ளது. அவசரச் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்குச் செல்வதற்குக்கூடக் காவல்துறையிடம் ஆவணங்களைக் காட்டவேண்டிய நெருக்கடி நிலையுள்ளது. பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க, அரசுக்கு ஒத்துழைக்கும் வகையில் இத்தனை இடர்பாடுகளையும் தாங்கிக்கொண்டு கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கிடையே வாழ்வா? சாவா? என மக்கள் போராடி வரும் நிலையில், தொற்றுப்பரவ அதிக வாய்ப்புள்ள பெருந்தொழிற்சாலைகளைத் தொடர்ந்து இயங்க அரசு அனுமதியளித்திருப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

தொற்றுப்பரவலில் தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் முன்னணியில் இருப்பதற்கு, தொடக்கத்தில் அங்குள்ள தொழிற்நிறுவனங்கள் அனுமதியின்றித் தொடர்ந்து இயங்கியதை அரசு தடுக்கத் தவறியதே முக்கியக்காரணமெனும்போது, அதிலிருந்து பாடமும், படிப்பினையும் கற்றுக்கொள்ளாமல் பெருந்தொழிற்சாலைகளை இன்றுவரை இயங்க அனுமதித்துக் கொண்டிருப்பது மிகக் கொடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும். குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இயங்கும் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அதிகப்படியாக கொரோனா தொற்றுக்குள்ளாவதும், அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்ந்து வருகின்றன. அத்தொழிற்சாலைகள் போதியப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்று தொழிலாளர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். ஊழியர்களை அழைத்து வரும் வாகனங்கள் முதல் பணிபுரியுமிடம், உணவு உண்ணுமிடமென அனைத்துப்பகுதிகளிலும் தனிமனித இடைவெளி பின்பற்றப்படுவதில்லையெனவும், கையுறை, முகக்கவசம் உள்ளிட்டப் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகக் கடைப்பிடிப்பதில்லையெனவும், தொழிற்சாலைகளுக்குள் நுழையும்முன் கைகளைச் சுத்தப்படுத்த வேண்டிய தொற்றுநீக்கிகூடப் பல தொழிற்சாலைகளில் வைக்கப்படவில்லையெனவும் அங்குப் பணிபுரியும் ஊழியர்கள் வேதனையும், அச்சமும் தெரிவிக்கின்றனர். சில இடங்களில் இதேபோன்ற காரணங்களுக்காகத் தொழிற்சாலைகளைத் தற்காலிகமாக மூடக்கோரி ஊழியர்கள் வேலைநிறுத்தத் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். ஆனால், கொரோனா தொற்று அறிகுறிகளுள்ள தொழிலாளர்களுக்குக் கூட விடுப்பளிக்க மறுக்கும் தொழிற்சாலை நிர்வாகங்கள், பணிநீக்கம் செய்வதாக மிரட்டிக் கட்டாயப்படுத்திப் பணிபுரிய வைப்பதாக எழும் குற்றச்சாட்டுகள் பெருங்கவலை அளிக்கின்றன. அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகள் இப்பேரிடர் காலத்தில் இயங்க வழிவகைச் செய்வது ஊரடங்கின் நோக்கத்தையே மொத்தமாகச் சிதைத்துவிடும் என்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்தத் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

ஆகவே, தனியார் பெருமுதலாளிகள் தங்களது இலாபநோக்கத்திற்காக தமிழக இளைஞர்களின் உயிரோடு விளையாடும் ஆபத்தானப் போக்கினை, அரசு கைகட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்காமல் உடனடியாக அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகள் இயங்க தற்காலிகமாகத் தடைவிதிக்க உத்தரவிட வேண்டும் எனவும், மின் உற்பத்தி, பால் பதனிடுதல் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக இயங்கும் தொழில் நிறுவனங்களிலும் குறிப்பிட்டக் கால இடைவெளிகளில் ஆய்வுகளை நடத்தி தொற்றுப்பரவல் தடுப்புப் பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com