பசும்பொன் தேவர் தங்ககவசம் எந்த தனி  நபருக்கும் சொந்தம் அல்ல-செல்லூர் ராஜூ!

பசும்பொன் தேவர் தங்ககவசம் எந்த தனி  நபருக்கும் சொந்தம் அல்ல-செல்லூர் ராஜூ!

Published on

மதுரையில் மாமன்னர்கள் மருது சகோதரர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி விட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார்.

மருது சகோதரர்கள் நினைவு நாள்

மாமன்னர்கள் மருது சகோதரர்களின்,  221 வது நினைவு நாளை முன்னிட்டு, மதுரையில் தமிழ் சங்கம் ரோட்டில்  உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ,மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அதன் பின்னர் அவர் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, இந்திய சுதந்திர போராட்டத்திற்கு  வித்திட்டவர்கள் மருதிருவர். அண்ணன் , தம்பி பாசத்திற்கும் நட்பிற்கும் உதாரணமாக தன் உயிரை நீத்த  மருது சகோதரர்களின் நினைவு நாள். அதிமுக சார்பில் வீர வணக்கம் செலுத்தியுள்ளோம்.

நினைவிடம் அமைத்த அதிமுக

அதிமுக சார்பில் மருது சகோதரர்களின்   நினைவிடம் அமைத்தது , அரசு விழாவாக அறிவித்தது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தான். அனைத்து இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் அதிமுக சார்பில் மரியாதை செலுத்தி வருகிறோம். வேறு  எந்த கட்சிக்கும்  இந்த பெருமை இல்லை. பசும்பொன் தேவருக்கு தங்க கவசம் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

அப்போது அதிமுக பொருளாளராக யார் இருக்கிறார்களோ,  அவர்களே தங்க கவசத்தை பெற்று ஒப்படைக்க வேண்டும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார். கடந்த 2015 ஆண்டு இது போன்ற கட்சியில் பிரச்சினை ஏற்பட்ட போது, ராமநாதபுரம்,  மதுரை மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைத்தனர்.

நீதிமன்ற உத்தரவுபடி செயல்படுவோம்

அது போன்ற நிலை தற்போது இல்லை. தற்போதைய நிலையில் அதிமுக  பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் உள்ளார். பிற வங்கிகளில் அதிமுக வங்கி  கணக்கை தற்போதைய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் நடைமுறை படுத்தி வருகிறார்.

இந்திய ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்றினாலே தற்போதைய பொருளாளருக்கு தான் உரிமை உள்ளது. பசும்பொன் தேவர் தங்ககவசம், அதிமுகவால் வழங்கப்பட்டது. பொருளாளர் கையெழுத்திட்டு எடுத்து செல்லலாம். தங்ககவசம் எந்த தனி  நபருக்கும் சொந்தமானது அல்ல. தற்போது தேவர் தங்கக்கசவசம் யார் பெறுவது என்பது குறித்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவுபடி நடுநிலையோடு செயல்படுவோம் என கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com