அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையனை சமரசம் பேசி, அவரது சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது அதிமுக. ஆனால் இதற்கு பின்னால் நடக்கும் அரசியல் ரகசியங்கள் அதிமுக.,வினரை கதிகலங்க வைத்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி மீது இருக்கும் அதிருப்தி காரணமாக அதிமுக கூட்டங்களை தொடர்ந்து தவிர்த்து வருகிறார். தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு முன்பும் சரி, அதற்கு பிறகும் சரி நடந்த அதிமுக எம்எல்ஏ.,க்கள் ஆலோசனை கூட்டங்களில் செங்கோட்டையன் பங்கேற்காமல் தவிர்த்துள்ளார். இதற்கிடையில் சட்டசபையில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானம் கொண்டு வந்தவர்களில் செங்கோட்டையனும் ஒருவர்.
செங்கோட்டையனுடன் சமரசம் :
இந்த சமயத்தில் சட்டசபை கூட்டத்திலேயே வைத்து செங்கோட்டையனுடன், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ நீண்ட நேரமாக அருகில் அமர்ந்து சமரசம் பேசி உள்ளார். இது தவிர சட்டசபைக்கு வெளியே முன்னாள் அமைச்சர் தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் மூத்த நிர்வாகிகளும் செங்கோட்டையனை அழைத்து சமரசம் பேசி உள்ளனர். ஆனாலும் செங்கோட்டையன் சமாதானம் ஆனது போல் தெரியவில்லை. இன்று சட்டசபையில் பேசிய செங்கோட்டையன், தன்னுடைய தொகுதி சார்ந்த கேள்விகளை மட்டும் எழுப்பி விட்டு, சிறிது நேரத்திலேயே அவையில் இருந்து சென்று விட்டார்.
இதெல்லாம் ஒரு விஷயமா?
செங்கோட்டையனுடன் அதிமுக நடத்தி இந்த அளவிற்கு சமரசம் பேசி வருவதற்கு பின்னால், சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானத்திற்கு செங்கோட்டையனின் ஆதரவு தேவை என்பதற்காக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தை மேலோட்டமாக பார்த்தால் அப்படி தான் தோன்றும். ஆனால் அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, "இதெல்லாம் ஒரு விஷயமா சார்? சபாநாயகர் விவகாரத்திற்காகவா இத்தனை பேர் போய் மாற்றி மாற்றி சமரசம் பேசி வருகிறார்கள்? செங்கோட்டையன் விஷயத்தில் நடப்பதே வேறு" என சொல்லி "ஷாக்" கொடுக்கிறார்கள். அந்த காரணம் என்ன என தெரிந்தால் கண்டிப்பாக அனைவரும் ஷாக் ஆக தான் செய்வார்கள்.
சமரசத்திற்கு பின்னால் இவ்வளவு இருக்கா?
அதாவது, பாஜக மற்றும் திமுக.,வை எதிரி என வெளிப்படையாக சொன்ன தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அதிமுக பற்றி இதுவரை பெரிதாக எதுவும் கருத்து சொல்லவில்லை. தற்போதைய அரசியல் கணிப்பின் படி வரும் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக-தவெக கூட்டணி அமைவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. அப்படி அமைந்தால் அதிமுக-பாஜக கூட்டணி அமைவது சிக்கலாகி விடும். பாஜக, தமிழக தேர்தல் களத்தில் தனித்து விடப்படும் நிலைமை ஏற்படும். இதனால் அதிமுக-தவெக கூட்டணி அமைவதை தடுப்பதற்காக பாஜக, செங்கோட்டையனை வைத்து காய் நகர்த்தி வருகிறதாம்.
இதை யாரும் எதிர்பார்க்கலியே!!
அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டதன் மூலம் கொங்கு மண்டத்தில் செங்கோட்டையனின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் கருதுகிறார். இந்த மனக்கசப்பை பயன்படுத்தி, செங்கோட்டையனுக்கு பெரிய பதவி கொடுப்பதாக சொல்லி தங்கள் பக்கம் அவரை வளைக்க பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருகிறதாம். இது அதிமுக.,வை மேலும் இரண்டு பிரிவுகளாக பிரிக்க பாஜக போடும் திட்டம் என்றும் வைத்துக் கொள்ளலாம். அதிமுக.,வை கூட்டணிக்கு வரவழைப்பதற்காக கொடுப்படும் நெருக்கடி என்றும் வைத்துக் கொள்ளலாம். ஒருவேளை செங்கோட்டையன், பாஜக பக்கம் சென்றாலும், அதிமுக.,வில் இருந்து வெளியேறினாலும் அது அதிமுக.,விற்கு பெரும் நெருக்கடியாக அமைந்து விடும்.
சமரத்திற்கு இது தான் காரணமா?
இந்த இரண்டில் எது நடந்தாலும் வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் அதிமுக.,வின் கனவு தவிடு பொடியாகும். மற்றொரு புறம் திருமாவளவனை வைத்து திமுக கூட்டணியை உடைக்க பாஜக எடுத்த முயற்சிகள் பலன் தராததால், தற்போது அதிமுக.,வை உடைக்கும் அல்லது நெருக்கடி கொடுக்கும் முயற்சியில் பாஜக இறங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. எப்படியாவது அதிமுக.,வை கூட்டணிக்கு இழுத்து விட வேண்டும் என்ற பாஜக.,வின் நோக்கத்தை தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மறைமுகமாக, "தங்களின் கூட்டணியில் இணைய பலரும் தவம் கிடக்கிறார்கள்" என குறிப்பிட்டார். செங்கோட்டையனை வைத்து அதிமுக.,வில் குழப்பத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்தும் பாஜக.,வின் முயற்சி வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காக தான் அதிமுக.,வின் மூத்த நிர்வாகிகள் இத்தனை பேரும் மெனக்கெட்டு சமரசம் பேசி வருகிறார்களாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்