பிணத்துடன் சாலையில் அமர்ந்து பொதுமக்கள்... சுடுகாடு வசதி கேட்டு போராட்டம்...

ஆண்டிப்பட்டி அருகே சுடுகாடு வசதி கேட்டு பிணத்துடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
பிணத்துடன் சாலையில் அமர்ந்து பொதுமக்கள்... சுடுகாடு வசதி கேட்டு போராட்டம்...
Published on
Updated on
1 min read

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா,  குமணன்தொழு ஊராட்சிக்கு உட்பட்ட வனத்தாய்புரம் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு பாத்தியப்பட்ட சுடுகாடு வனத்தாய்புரத்தில் இருந்து மண்ணூத்து செல்லும் பாதையில் உள்ளது. மிகவும் சிறிய அளவிலான இடத்தில் உள்ள சுடுகாட்டில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. ஏற்கனவே உடல் புதைக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் புதைக்கும் நிலை இருந்து வந்துள்ளது. 

இதனால் அனைத்து வசதிகளுடன் கூடிய நிரந்தர சுடுகாடு செய்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் சம்பந்தபட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் வனத்தாய்புரத்தை சேர்ந்த 65 வயது பாண்டி என்பவர் இறந்தார். அவர் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு எடுத்து வந்த மக்கள் திடீரென பிணத்தை சாலையில் கிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுடுகாடு வசதி செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

இதனையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்களின் கோரிக்கைகளை மிக விரைவில் நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். இதன்காரணமாக சுமார் 2 மணிநேரம் நடத்திய போராட்டத்தை கைவிட்டு, சாலையில் வைக்கப்பட்ட பிணத்தை எடுத்து அடக்கம் செய்தனர். பிணத்துடன் மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com