ஈபிஎஸ்-க்கு எதிராக கோஷம்; "அருவருக்கத்தக்க செயல்" சீமான் காட்டம்!

ஈபிஎஸ்-க்கு எதிராக கோஷம்; "அருவருக்கத்தக்க செயல்" சீமான் காட்டம்!
Published on
Updated on
1 min read

"பசும்பொன்னில் ஈபிஎஸ்-க்கு எதிராக கோஷம் எழுப்பியது அருவருக்கத்தக்க, அநாகரீகமான செயல். அவர் மீது வெறுப்பு இருந்தால் அதை வேறு இடத்தில் செய்ய வேண்டும்" என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார். 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 61வது குருபூஜை மற்றும் 116 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு மீண்டும் சென்னை செல்வதற்காக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, சாதிய எண்ணம் கொண்டவன் அரசியலுக்கு வந்தால் நாடு நாசமாகிவிடும், சாதிய சிந்தனை உடையவன் இறைவனை வழிபடவே அறுகதையற்றவன் என்று கூறிய பதவி ஆசை அற்ற ஒரு சித்தர் என்று கூறுப்படும் முத்துராமலிங்கத் தேவரின் நினைவை போற்றுகின்ற நாள் இன்று எனக் கூறினார். 

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக துணை முதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "அதற்குள் அரசியல் உள்ளது. தமிழர்களின் சொத்துக்கள் எல்லாம் விரித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரவரின் நீர் வளம் அவரவர்களுக்கு என்று கேரளா, கர்நாடக நினைத்துக் கொண்டால் நம்முடைய வளங்கள் நமக்கு என்று நாம் எண்ண வேண்டியுள்ளது. பகைநாடுகளாக இருக்கக்கூடிய பாகிஸ்தானுக்கு கூட சிந்து நதியிலிருந்து 80 சதவீத நீரை கொடுத்து வருகிறோம். இந்த நிலை நீடிப்பது தேச இறையாண்மைக்கு ஆபத்தானது. ஒரு மாநில தேர்தல் வெற்றிக்காக காங்கிரசும், பாஜகவும் ஒரு தேசிய இனத்தின் உரிமையை பறிகொடுக்க தயாராகி விட்டது. ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்றால் ஒரு ஓட்டு கூட இல்லை என்கிற நிலையை நாம் உருவாக்குவோம்" என்றார். 

பசும்பொன்னில் ஈபிஎஸ்-க்கு எதிராக கோஷம் எழுந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இது அருவருக்கத்தக்க, அநாகரீகமான செயல். அவர் மீது வெறுப்பு இருந்தால் அதை வேறு இடத்தில் செய்ய வேண்டும், அய்யாவின் புனிதமான ஒரு இடத்தில் அதை செய்வது அவரையே அவமதிப்பது போன்றது. எங்கள் ஐயா எந்தவித ஆடம்பரமும் விரும்பாத சன்னியாசி போல வாழ்ந்தவர் ஆனால் அங்கு முதல்வர் வருவதற்காக ஏக்கர் கணக்கில் வாழை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. அது யாருக்கும் பயனில்லை. இந்த ஆடம்பரங்கள் வருத்தம் அளிக்கிறது வரும் காலங்களில் இதை அவர்கள் தவிர்க்க வேண்டும். 

வாடகை வண்டியில் செல்லக்கூடாது என்கிறார்கள். 144 தடை உத்தரவு பிறப்பிக்கிறார்கள். இது அவர்மீதான அவமதிப்பாக உள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு நாங்கள் காட்டுமிராண்டிகளா. பின்னர் எதற்காக 7000 மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள். குற்றச்சம்வங்களுக்கு காரணம் மதுதான், மதுக்கடைகளை மூடாமல் திறந்து வைத்துள்ளார்கள்" எனக் கூறினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com