பத்திரம் உங்கள் பெயரில் இருந்தால் மட்டும் போதுமா? பட்டா இல்லாத நிலத்தை வாங்கினால் என்னென்ன சிக்கல்கள் வரும்?

பாத்திரத்தை மட்டும் வைத்து, பட்டா இல்லாத நிலத்தை வாங்கும் போது அதில் ஏமாற்று வேலைகள், வில்லங்கங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
Is a Sale Deed Enough? What Are the Risks of Buying Land Without a Patta?
பத்திரம் உங்கள் பெயரில் இருந்தால் மட்டும் போதுமா? பட்டா இல்லாத நிலத்தை வாங்கினால் என்னென்ன சிக்கல்கள் வரும்?AI Generated (File Image)
Published on: 
Updated on: 
2 min read

நிலம் வாங்குவது நம் நாட்டில் பல அடித்தட்டு குடும்பங்களின் கனவு. வாழ்நாள் சேமிப்புகளை வைத்து நிலம் வாங்கும்போது அதில் எந்த சிக்கலும் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம்.

பத்திரம் மட்டும் இருந்தாலே சட்டப்படி ஒரு நிலத்தை வாங்க முடியும். ஆனால் பட்டா இல்லாத நிலத்தை வாங்குவதால் நாம் பல சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும். என்ன மாதிரியான சிக்கல்கள் வரும், அதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ளும் முன் பட்டா, பத்திரம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

பட்டா:

பட்டா என்பது ஒரு அசையா சொத்தின் உரிமையாளர் யார் என்பதற்கு வருவாய்த் துறை வழங்கக்கூடிய ஓர் ஆவணம்.  ஒரு நிலம் யாருடைய பெயரில் இருக்கிறது, அதன் சர்வே எண் என்ன, பரப்பளவு மற்றும் எல்லைகள் என்ன என்பது போன்ற அனைத்து விவரங்களும் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

பத்திரம்:

நிலம், வீடு அல்லது வாகனம் போன்ற அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் உரிமையை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சட்டப்பூர்வமாக மாற்றுவதைக் குறிக்கும் மிக முக்கிய ஆவணம் பத்திரம். இதனை சட்டப்படி பதிவு செய்து கொள்வது அவசியம். பதிவு செய்யப்படாத பத்திரங்கள் நீதிமன்றங்களில் செல்லுபடியாகாது.

பட்டா இல்லாத நிலத்தை வாங்கினால் என்னென்ன சிக்கல்கள் வரும்?

பாத்திரத்தை மட்டும் வைத்து, பட்டா இல்லாத நிலத்தை வாங்கும் போது அதில் ஏமாற்று வேலைகள், வில்லங்கங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

 புதியதாக பிரிக்கப்பட்ட நிலங்கள், விவசாய நிலங்கள் அல்லது கிராம நாதம் நிலங்கள் போன்றவற்றிற்கு ஆரம்பத்தில் பட்டா மாற்றம் செய்யப்படாமல் இருக்கலாம், அத்தகைய சூழலில் விற்பனை பத்திரம் முதன்மை உரிமை ஆவணமாக கருதப்படுகிறது. ஆனால் அந்த நிலத்திற்கு பின்னர் பட்டா பெற முடியுமா, அந்த நிலத்தின் உரிமை தெளிவாக உள்ளதா என்பதை மிகவும் கவனமாகச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.

 பட்டா இல்லாத நிலம், பெரும்பாலும் அரசு நிலம் (புறம்போக்கு), மேய்ச்சல் நிலம் அல்லது நீர்நிலை ஆக்கிரமிப்பாக இருக்கலாம்.

இத்தகைய நிலங்களுக்கு ஒருபோதும் பட்டா கிடைக்காது. இந்த நிலங்களை சிலர் போலியான ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யும் மோசடிகள் அதிக அளவில் நடைபெறுகின்றன.

இந்த முறையில் ஒரு நிலத்தை நீங்கள் வாங்கினால், அரசு அந்த நிலத்தை மீட்க முயலும்போது எந்த இழப்பீடும் இல்லாமல் நிலத்தை இழக்க நேரிடும்.

 நீங்கள் வாங்கிய நிலத்தை உங்கள் பெயருக்கு மாற்றுவதற்கும், வீடு கட்டுவதற்கான DTCP அல்லது CMDA அனுமதி பெறுவதற்கும் பட்டா மிக முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. பட்டா இல்லாவிட்டால் நிலத்தை அடமானம் வைத்து வங்கியில் கடன் கூட வாங்க முடியாது.

நிலத்தின் உரிமையாளர் யார் என்று பட்டாவில் மட்டுமே இருக்கும். இதனால் பட்டா இல்லாத நிலத்தை யார் வேண்டுமானாலும் உரிமை கொண்டாட வருவார்கள்.

ஒருவரின் நிலத்தை வாங்குகிறீர்கள் என்றால் அவரது வாரிசுகள் அதில் உரிமை கொண்டாடலாம். பட்டா இருக்கும் பட்சத்தில் அது கூட்டுப்பட்டாவா, யாருடைய நிலத்தை வாங்குகிறோம் என்பதில் தெளிவு இருக்கும்.

நீங்கள் ஒரு நிலத்தை வாங்குவதாக இருந்தால் முதலில் அந்த நிலத்திற்கான வில்லங்கச் சான்றிதழ், பழைய பத்திரங்கள், நிலத்தின் வரலாறு மற்றும் பட்டா நிலை போன்றவற்றை முழுமையாகச் சரிபார்க்க வேண்டியது மிகவும் அவசியம். பத்திரத்தை மட்டும் நம்பி வாங்கினால் எப்போது வேண்டுமானாலும் நிலத்தை இழக்கவோ தேவையில்லாத சட்ட பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ளவோ நேரிடலாம்.

Is a Sale Deed Enough? What Are the Risks of Buying Land Without a Patta?
நேகாவுடன் கைகோர்க்கும் ராகுல்.. அபிஜித்தை அரவணைக்கும் ஸ்டாலின்.. நாடாளுமன்ற தேர்தலில் 'Gen Z' வைக்கப்போகும் ட்விஸ்ட்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்!

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com