தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காரில் காய்கறிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பெட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தியதாக தந்தை-மகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களுரூவிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கோவில்பட்டி ராஜீவ் நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் காய்கறிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் காலி பெட்டிகள் இருந்தன.
அவற்றை அப்புறப்படுத்தி பார்த்தபோது அதற்கு கீழ் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 3 ஆயிரத்து 630 பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதுதொடர்பாக கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த கோவில்பட்டி முத்தையா மால் தெருவை சேர்ந்த சண்முகம் (63), அவருடைய மகள் ரோகிணி (38) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.