“குளங்களை தூர்வாரினால் போதும்.. யாரிடமும் கையேந்த வேண்டாம்” - சௌமியா அன்புமணி முன்வைத்த திட்டம்.. காவிரி பிரச்சனைக்கு தீர்வாகுமா?

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான திட்டங்களும் போதுமான அளவில் இடம்பெறவில்லை...
sowmiya anbumani
sowmiya anbumani
Published on
Updated on
2 min read

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் இன்று பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேசினார். அப்போது, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் தொடர்பாக அரசு அறிவித்துள்ள சில திட்டங்களை வரவேற்ற அவர், விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு இடம்பெறாததற்கு அதிருப்தி தெரிவித்தார். நம்மாழ்வார் மற்றும் அஞ்சலை அம்மாள் பெயரில் விருதுகள் வழங்குவது, இயற்கை வேளாண் பட்டயப்படிப்பு பல்கலைக்கழகத்திற்கு நம்மாழ்வார் பெயர் சூட்டுவது உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு பாமக சார்பில் வரவேற்பு தெரிவித்த சௌமியா அன்புமணி, பெண் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

மேலும், பாமகவின் நீண்டகால கோரிக்கையான சேவை உரிமைச் சட்டத்தை அமல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார். பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்களை விரைவாக பெறுவதற்கு இந்தச் சட்டம் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேவேளையில், வேளாண் பட்ஜெட்டில் வேளாண்மை மட்டுமின்றி கால்நடை, பால்வளம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த துறைகளுக்கும் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளதாக சௌமியா அன்புமணி குற்றம்சாட்டினார். “வீட்டில் பெண்கள் பட்ஜெட் போடும்போது சாப்பாட்டுக்கு தேவையான நிதியை ஒதுக்காமல் இருப்பார்களா?” என கேள்வி எழுப்பிய அவர், விவசாயத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

ஆறுகள் இணைப்பு உள்ளிட்ட நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு 10 கிலோமீட்டருக்கும் தடுப்பணைகள் அமைத்தால் வெளிமாநிலங்களை நம்பியிருக்கும் நிலையை குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாருவது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக கூறிய அவர், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான திட்டங்களும் போதுமான அளவில் இடம்பெறவில்லை என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 27 ஆயிரம் குளங்களை முறையாக தூர்வாரினால் சுமார் 150 டி.எம்.சி. வரை தண்ணீரை சேமிக்க முடியும் என்றும், ஏற்கனவே இருந்த ஆயிரக்கணக்கான நீர்நிலைகள் தற்போது குறைந்துள்ள நிலையில், தற்போது  உள்ள நீர்நிலைகளை குறைந்தபட்சம் ஒரு மீட்டர் ஆழத்திற்கு தூர்வார வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அப்படி செய்தால் கர்நாடக, ஆந்திரா, கேரளா என யாரிடமும் கையேந்த வேண்டாம்.  இது தவிர, தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினையையும் சௌமியா அன்புமணி சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டினார். அரசு வேலை என்பது இளைஞர்களுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளதாக கூறிய அவர், 3,000 பணியிடங்களுக்கு 30 ஆயிரம் பேர் தேர்வு எழுதும் அளவுக்கு வேலைவாய்ப்புக்கான போட்டி அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

அரசுப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பிறகும் சிலருக்கு பணி கிடைக்காத நிலை இருப்பதாக குற்றம்சாட்டிய சௌமியா அன்புமணி, தனியார் நிறுவங்களின் இடஒதுக்கீட்டை பின்பற்ற அரசு உத்தரவிட வேண்டும் என்றும் அப்படி செய்தால் அரசு வேலை கிடைக்காத இளைஞர்கள் தனியார் நிறுவனத்தில் தனக்கான வேலைகளை தேடி கொள்வார்கள் என கூறினார். தொடர்ந்து விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com