கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்றுக்குப் பிறகு இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
அதே போல் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. இதனால் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள உள்ளனர். எனவே பொதுமக்கள் அதிக அளவில் வெளியூர் செல்லக்கூடும் என்பதால் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி வெள்ளிக்கிழமை 300 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படுவதாகவும், சனிக்கிழமையும் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு மீண்டும் வருவதற்கும் போதுமான பேருந்துகள் இயக்க தயாராக உள்ளதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.