சபரிமலை பக்தர்களுக்காக....! சென்னை - பம்பை வரை சிறப்பு பேருந்து இயக்கம்...!

சபரிமலை பக்தர்களுக்காக....! சென்னை - பம்பை வரை சிறப்பு பேருந்து இயக்கம்...!
Published on
Updated on
1 min read

சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை - பம்பை இடையே நவம்பர் 17ம் தேதி (இன்று) முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை ஏற்கனவே அறிவித்தது. 
 
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை காண ஒவ்வொரு ஆண்டும்  தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் செல்வது வழக்கம். அவர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள்  நவம்பர் 17ஆம் தேதி, அதாவது இன்று முதல் ஜனவரி மாதம் இருபதாம் தேதி வரை இயக்கப்படுகின்றது.

குறிப்பாக ஒரு நாளில் இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகிற நிலையில் முதற்கட்டமாக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மாலை 3 மணிக்கு ஒரு பேருந்தும் 03.30 மணிக்கு ஒரு பேருந்தும் என இரண்டு பேருந்துகள் இன்று இயக்கப்பட்டன. அரசு போக்குவரத்து கழகத்தின் இணையதளத்தில் இருக்கைக்கான டிக்கெட் முன்பதிவு செய்த 34 பக்தர்களுடன் சிறப்பு பேருந்தானது கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டது. இந்த பேருந்தானது நாளை காலை 6 மணிக்கு பம்பை சென்று அடையும். இருக்கைகளுடன் கூடிய பேருந்து மற்றும் அதிநவீன வசதிகள் கூடிய பேருந்துகள் என  போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்படுகிறது. பயணிகளுக்கு ஆயிரத்து 200 ரூபாயிலிருந்து டிக்கெட்டின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பேருந்துகளின் இருக்கைகளை,  www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதே போல், சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்தையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள இந்த பேருந்து வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றும் இனிவரும் நாட்களில் அதிகப்படியான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க செல்ல உள்ளதால் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com