
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில், இலங்கையைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர், வங்கதேசம், நைஜீரியா, சூடான், பல்கேரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 30 பேர் என மொத்தம் 100க்கும் மேற்பட்டோர், பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும், தண்டனைக் காலத்திற்கு பிறகும், சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளதாகவும், ஜாமீனில் சென்றவர்களையும் கைது செய்துள்ளதாகவும் கூறி, அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருவதோடு, அவ்வப்போது பல்வேறு கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் பலனிக்காத நிலையில், 15-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், திக்சன் என்பவர் கழுத்திலும், ரமணன் என்பர் வயிற்று பகுதியிலும் அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க, காவல்துறை ஏற்பாடு செய்துள்ள நிலையில், காலம் கடந்தும் தமிழக அரசு தங்களை விடுதலை செய்யவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.