காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்டுவதில் திமுக அரசு உறுதியாக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் வினா விடை நேரத்திற்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி விவகாரம் குறித்த தனி தீர்மானத்தை கொண்டு வந்தார்.
தீர்மானத்தின்மீது பேசிய முதலமைச்சர், திமுக அரசு பொறுப்பெற்றது முதல் மேட்டூர் அணையில் இருந்து சீராக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாக கூறினார். டெல்டா பகுதிகளில் கால்வாய்கள் தூர் வாரப்பட்டதால் காவிரி நீர் கடைமடை சென்று பயிர்கள் செழித்ததாக பெருமிதம் தெரிவித்தார். காவிரி நதிநீர் உரிமையை காப்பதில் ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க் கட்சியாக இருந்தாலும் நதி நீர் உரிமையை காப்பதில் திமுக எப்போதும் உறுதியாக இருக்கும் என்றார்.
ஆனால், கடந்த ஜூன் மாதம் பிலிகுண்டுலுவில் 9.19 டி.எம்.சி.க்கு பதிலாக 2.28 டிஎம்.சி தண்ணீரை மட்டுமே கர்நாடக அரசு திறந்து விட்டதால், நமது விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தார்.
ஆகவே, உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாதம் வாரியாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீர் திறக்க கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சரை, அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்து வலியுறுத்தியதாக கூறினார். தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சியால் கபினி அணையில் இருந்து அடுத்த 6 நாட்களுக்கு தண்ணீர் திறக்கவும், 21-ந் தேதி 11 ஆயிரம் கனஅடி நீர் வழங்கவும் கர்நாடக அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, ஆகஸ்ட் 4-ந் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாக குறிப்பிட்ட முதலமைச்சர், ஆகஸ்ட் 11ஆம் தேதி நடந்த கூட்டத்தில் 15 ஆயிரம் கன அடியை 10 ஆயிரம் கனஅடியாக காவிரி மேலாண்மை ஆணையம் குறைத்ததாக தெரிவித்தார்.
அதே நேரத்தில், சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முதலமைச்சர், வேளாண்மை மற்றும் மக்களின் நலன்காக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளதாக கூறினார். இதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் திமுக அரசு தயங்காமல் மேற்கொள்ளும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
மக்களின் உணவு தேவைக்காக மட்டுமல்ல மனித உயிர்களின் உயிர் காக்கவும் காவிரி நீர் அவசியம் என்பதால், விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க தமிழ்நாடு அரசு இறுதிவரை போராடும் என்றார்.
ஆகவே, காவிரி குறித்த தனி தீர்மானத்திற்கு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த முதலமைச்சர், டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், காவிரியில் இருந்து உரிய நீரை வழங்க கர்நாடகா அரசு உத்தரவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனி தீர்மானத்தின் போது முதலமைச்சர் வலியுறுத்தினார்.