
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் எந்த வித சர்ச்சைகளுக்கும் இடமளிக்காத வகையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கடந்த இரண்டு மாதங்களாக வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட சுமார் 11 லட்சத்து 85 ஆயிரம் மேல்முறையீடு செய்த நிலையில், அதில் 7 லட்சத்து 35 ஆயிரம் புதிய பயனாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், புதிய பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அப்போது, பேசிய அவர், மருத்துவர்களின் அறிவுத்தல்களையும் மீறி தொண்டையில் வலி இருந்தாலும் தொண்டில் பாதிப்பு இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறினார்.
சொத்து உரிமை, கல்வி, வேலை வாய்ப்பு என மகளிர் உரிமைக்காக திமுக தொடர்ந்து செயல்படுவதாக குறிப்பிட்ட அவர், இது உதவித் தொகை அல்ல உரிமைத் தொகை என்றார். தேவையும், தகுதியும் உள்ள அனைத்து மகளிருக்கும் சென்று சேர வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என்று கூறினார்.
மேல்முறையீடு செய்யும் தகுதியான மகளிர்களுக்கு டிசம்பர் மாதம் முதல் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்த விதமான புகாருக்கும் இடமில்லாமல் இந்த திட்டம் இமாலய வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.