மக்களை பற்றி கவலைப்படாத முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டுதெருவில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 700 பேர் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது, திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த வித நன்மையும் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், 520 வாக்குறுதிகளில் ஒன்றிரண்டை நிறைவேற்றிவிட்டு எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டதாக பச்சைப் பொய் சொல்லப்படுவதாகக் கூறிய அவர், இரண்டரை ஆண்டு காலத்தில் துறை வாரியாக கொள்ளையடித்ததுதான் திமுகவின் சாதனை என்று விமர்சித்தார்.
மக்களை பற்றி கவலைப்படாத முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின், தன் குடும்பத்தினர் நலனுக்காக மட்டுமே உழைப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், உதயநிதியை முதலமைச்சராக்க நினைக்கும் ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது என்று கூறிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதை ஸ்டாலினால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்று கூறினர். அத்துடன், சிறுபான்மை மக்களை தந்திரமாக ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களை மறந்துவிட்டார் என்றும் குற்றம்சாட்டினார்.