சென்னை தாழம்பூரை அடுத்த ஒட்டியம்பாக்கம் பொன்மார் மலைத்தெருவில் வசித்து வந்தவர் விமல்ராஜ். அட்வென்ட் கிறிஸ்தவ திருச்சபையில் துணை பாதிரியாராக பணியாற்றி வரும் இவருக்கு, கடந்த 2020-ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த வைஷாலி என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது.
விமல்ராஜ் - வைஷாலி தம்பதியருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதியன்று வைஷாலி உடல்நலக்குறைவால் இறந்ததாக தகவல்பரவியது. இதைக் கேட்டு அதிர்ந்து போன வைஷாலியின் பெற்றோர் மும்பையில் இருந்து சென்னை வந்து மகளை பார்த்தனர்.
அப்போது வைஷாலியின் கழுத்தில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்தவர்கள் தாழம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் விமல்ராஜை தங்கள் பாணியில விசாரித்தனர். இதில் விமல்ராஜ், மனைவி வைஷாலியை கீழே தள்ளி விட்டு கழுத்தில் காலை வைத்து மிதித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து பாதிரியார் விமல்ராஜை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் விமல்ராஜ் - வைஷாலி ஆகியோர் வசித்து வந்த வீட்டில் இருந்து உடைமைகளை திருப்பி எடுப்பதற்கு வைஷாலியின் உறவினர்கள் சென்றனர்.
அப்போது விமல்ராஜின் பெயரில் பெரிய பாக்ஸ் ஒன்று இருந்தது. அதைப் பிரித்து பார்த்தபோது, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதை தரும் மாத்திரைகள் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை இருந்தன.
இதனால் அதிர்ச்சியடைந்த வைஷாலியின் தாயார் மேரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பின்னர் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியானது.
அதாவது, வைஷாலியுடன் இல்லற வாழ்க்கை நடத்தி வந்த பாதிரியார் விமல்ராஜுக்கு பொன்மார் பகுதியைச் சேர்ந்த ஜெபஷீலா என்ற பெண்ணுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இருவரும் சேர்ந்து போதை மாத்திரைகளை வாங்கி, அதனை இளைஞர்கள், சிறுவர்களுக்கு விற்பனை செய்து வந்தனர்.
இதுகுறித்து வைஷாலிக்கு விவரம் தெரியவரவே, போதை மாத்திரை விற்பதை வெளியில் சொல்லி விடுவாரோ என பயந்து, மனைவியை காலால் மிதித்து கொலை செய்திருக்கிறார் விமல்ராஜ்.
கொலை வழக்குடன் போதைப் பொருள் கடத்தியது குறித்தும் வழக்குப்பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக தினேஷ், சந்திரசேகர், அரவிந்த், அஜய், மைக்கேல், சங்கர் ஆகியோருடன் விமல்ராஜின் காதலி ஜெபஷீலாவையும் சேர்த்து மொத்தம் 7 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் தினேஷ், அரவிந்த் ஆகியோர் மீது தலா 6 வழக்குகளும், அஜய் மீது 20 வழக்குகளும் நிலுவையில் இருந்தன. வெளியில் பாதிரியாராக வலம் வந்தவர் ரகசியமாக போதைப்பொருள் கடத்தி விற்பனை செய்ததும், தட்டிக்கேட்ட மனைவியை கொலை செய்திருப்பதும் காவல்துறையையே கதிகலங்க வைத்துள்ளது.