
படத்தில் நடிப்பதற்காக பெற்ற முன் பணத்தை திரும்பி தரக் கோரி தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கில், 5 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
படத்தில் நடிப்பதற்காக பெற்ற 6 கோடி ரூபாய் முன் பணத்தை திரும்ப தர நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடக்கோரி பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதேபோல, கொடுத்த கால்ஷீட்டில் படத்தை தயாரிக்காமல் தமக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கூறி 9 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு உத்தரவிடக்கோரி நடிகர் ரவி மோகனும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் மூலம் எதிர்மறையான விளம்பரம் தான் ஏற்படும். அதற்கு பதிலாக பணத்தை திரும்ப அளித்துவிடலாமே? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ரவி மோகன் தரப்பு வழக்கறிஞர் எஸ்.கார்த்திகைபாலன், வழக்கில் தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க விரும்புவதாக கூறினார். மேலும் அவர், அடுத்த படத்தில் நடிக்கும் போது பணத்தை திரும்ப அளிப்பதாக கூறியதை தயாரிப்பு நிறுவனம் ஏற்கவில்லை என்றும் கொடுத்த கால்ஷீட்டை பயன்படுத்தவில்லை என்றும் கூறினார்.
தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆகியோர், தனது மனைவி உடனான பிரச்னையின் போது, வாடகை வீட்டில் வசித்து வருவதாக அறிக்கை வெளியிட்ட நடிகர் ரவிமோகன், தற்போது சொந்த பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாகவும், தங்கள் நிறுவனம் அளித்த முன் பணத்தை கொண்டு ரவிமோகன் தனது சொந்த பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையேயான இந்த பிரச்னையை பேசி தீர்த்துக்கொள்ள மத்தியஸ்தரை நியமிப்பதாக தெரிவித்த நீதிபதி, 9 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும், வேறு படங்களை வெளியிடவும் பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு தடை விதிக்கக்கோரி ரவி மோகன் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், 5 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான சொத்து உத்தரவாதத்தை தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.