
அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி மக்கள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
புத்த துறவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் அரசுக்கு எதிராக அணி திரண்டு போராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாடளுமன்றம் செல்லும் சாலையை மறித்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், மக்களின் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசப்படவில்லை என்று கூறி தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்ற மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழல் உருவானது.
இதையடுத்து தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைக்க காவல்துறை நடவடிக்கை எடுத்தது. ஆனால், கண்ணீர் குண்டுகளை பிடித்து காவல்துறை மீது மாணவர்கள் வீசி எறிந்தனர்.
இதனிடையே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக வந்த செய்தியை அடுத்து காலிமுகத் திடலில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.