"பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் ஈழம் மலரும்" வைகோ..!!

"பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் ஈழம் மலரும்" வைகோ..!!
Published on
Updated on
2 min read

பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் ஈழம் மலர்ந்தாக வேண்டும். அது நிச்சயமாக நடக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த ஈழத் தமிழர்கள் 14 ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் மதிமுகவின் தலைமை அலுவலகமான எழும்பூரில் உள்ள தாயகம் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.முன்னதாக அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மே 17 நினைவு சின்னத்திற்கு கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி அஞ்சலி செலுத்தினர் 

பின்னர் மேடையில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, "ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் நான் என்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்பவில்லை. இன்றைக்கும் நான் கைதி தான். நான் எழுதிய குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தகத்தில் இந்திய அரசின் மீது  குற்றச்சாட்டு வைத்து  எழுதி இருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்திய போது நான் இந்தியா இலங்கைக்கு ஆயுதங்கள் அளித்தது. தமிழ் இனப்படுகொலைக்கு ஆதரவாக இருந்தது என்று சொன்னேன்.

அதற்காக நடந்த வழக்கை விசாரித்த நீதிபதி எனக்கு ஒரு வருடம் தண்டனை என்று குறிப்பிட்டார். ஒருவேளை இரண்டு வருடம் என்று குறிப்பிட்டு இருந்தால், தற்போது ராகுல் காந்தி இருப்பது போன்று நானும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது" எனத் தெரிவித்தார். 


வாழ்க்கை என்பது கண நேரத்தில் கரைந்து போகும் நீர்க்குமிழி போன்றது இன்று ரவீந்திரநாத் தாகூர் சொல்லியதை சுட்டிகாட்டிய அவர் அதுபோன்று எனது வாழ்க்கையில் பெரும் பகுதி கரைந்து விட்டது என சோகமாக தெரிவித்துள்ளார். 


மேலும் "2009ஆம் ஆண்டு இலங்கைக்கு  இந்தியா ஆயுதங்கள் கொடுப்பதாக இந்து பத்திரிக்கையில் செய்தி வந்த போது மன்மோகன் சிங்கிடம் சென்று இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுக்கப் போகிறீர்களா? ரகசிய ஒப்பந்தம் போடப் போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினேன். பின்னர் இது பற்றி சோனியா காந்தி இடம் கேட்ட பொழுது இராணுவ ஒப்பந்தம் போடவில்லையே? என்று கூறிவிட்டு ராணுவ ஒப்பந்தம் போட்டார்கள். ஆகவே இலங்கை தமிழர்கள் அத்தனை பேரின் இழப்பிற்கு இந்திய அரசாங்கம் தான் காரணம் இல்லையேல் பிரபாகரனின் படையை அவர்களால் தோற்கடித்திருக்க முடியாது" என தெரிவித்துள்ளார் 


இன்றைக்கு அனைத்து தலைவர்களும் ஈழப் பிரச்சனைக்கு பொதுவாக்கெடுப்பு தேவை என்று சொல்லும் பொழுது தான் இதனை ஏதோ ஒன்றை சாதித்ததாக நினைத்துக்கொள்வேன் எனக் கூறி பெருமிதமடைவதாக கூறிய அவர் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை நோக்கி வேறுபாடுகளை மறந்து ஒரு இலக்கோடு சென்றால் நாம் சென்றால், 14 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற  ஈழ படுகொலைக்கு  நீதி கிடைக்கும் எனக் கூறியுள்ளார். மேலும் "பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் ஈழம் மலர்ந்தாக வேண்டும். அது நிச்சயமாக நடக்கும்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com