தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: பெண்களின் எழுச்சி! “அதிகரிக்கும் வேட்பாளர்கள்” - பிரநிதித்துவத்தை கைப்பற்றுவார்களா?

80 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் தங்களின் ஜனநாயக கடமையை தவறாமல் வாக்களித்தனர்
Tamil Nadu Assembly Elections
Published on
Updated on
2 min read

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பளர்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. தேர்தல் தரவுகளின்படி, ஏப்ரல் 23, 2026 நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 442 பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்கு மாறாக, இந்த முறை 3,581 வேட்பாளர்கள் ஆண்கள் போட்டியிடுகின்றனர். அதேபோல் தமிழகத்தில் 2,89,60,838 பெண்கள், 2,77,38,925 ஆண்கள் மற்றும் 7,617 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். இதில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் தங்களின் ஜனநாயக கடமையை தவறாமல் வாக்களித்தனர். தேர்தலில் பெண்களின் வலுவான பங்களிப்பை இந்த வாக்குப்பதிவு சதவீத உயர்வில் தெரிந்துகொள்ளலாம். வாக்குப்பதிவு செயல்பாட்டில் பெண்கள் காட்டிய ஆர்வத்திற்கு ஆண்கள் ஈடு செய்யவில்லை. வேறுவிதமாகக் கூறினால், பெண்கள் காட்டிய ஆர்வத்தின் அளவை அவர்கள் வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால், கூடுதல் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை தற்போதைய கணிசமான அளவை தொட்டிருக்காது.

பெண்களின் இந்த அதிக ஆர்வத்திற்குப் பல காரணங்களைக் கூறலாம். ஒவ்வொரு முக்கிய அரசியல் கட்சியும் பெண் வாக்காளர்களைக் கவரக்கூடிய திட்டங்களை வாக்குறுதியளித்துள்ளன. தொடர்ந்து நடந்த பிரசாரமும், வாக்குறுதிகளும் பெண்களுக்கான நலன் சார்ந்த திட்டங்களை முன்னிறுத்தியே நடந்தது. ஆனால் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை. இது தேர்தல் பிரதிநிதித்துவத்தில் தொடரும் பாலின ஏற்றத்தாழ்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

இருப்பினும் இந்த வளர்ச்சி, முந்தைய பத்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஒரு குறிப்பிடத்தக்க உயர்வாகும். 1967-ல், 778 வேட்பாளர்களில் வெறும் 11 பெண்கள் மட்டுமே இருந்தனர். இந்த எண்ணிக்கை 1984-ல் 46 ஆக உயர்ந்து, 2006-ல் மேலும் அதிகரித்து 156 ஆக ஆனது. 2021-ல் இந்த எண்ணிக்கை 413-ஐ எட்டியது. அப்போது, ​​மொத்தமுள்ள 3,998 வேட்பாளர்களில் பெண்கள் கிட்டத்தட்ட 10 சதவீதமாக இருந்தனர். இதுவே தமிழகத்தில் பதிவுசெய்யப்பட்ட மிக உயர்ந்த விகிதமாகும்.

பங்கேற்பில் இந்த உயர்வு இருந்தபோதிலும், தேர்தல் களத்தில் ஆண்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும், வெற்றி விகிதத்தைப் பொறுத்தவரை பெண் வேட்பாளர்கள் வரலாற்று ரீதியாக சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்று தரவுகள் குறிப்பிடுகின்றன. 1984 முதல் 2016 வரை, வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்களின் விகிதம் ஆண்களை விட தொடர்ந்து அதிகமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் நடந்த ஒவ்வொரு தேர்தலிலும், ஆண் வேட்பாளர்களுடன் ஒப்பிடும்போது பெண் போட்டியாளர்கள் தங்கள் டெபாசிட் இழப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்தது.

2001-ல் 25 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அதேசமயம் 2006-ல் 22 பேர் சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர். இந்த அதிகரிப்புகள், முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான மாபெரும் வெற்றிகளுடன் ஒத்துப்போயின. அவரது கட்சியும் கூட்டணி கட்சிகளும் ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையிலான பெண் வேட்பாளர்களை நிறுத்தித் தேர்தலை சந்தித்தது. இருப்பினும், இந்த ஆதாயங்கள் சீராக இல்லை. 2021-ஆம் ஆண்டில், இந்த நிலை தலைகீழாக மாறியது. 2016-ஆம் ஆண்டை விட கிட்டத்தட்ட 100 பெண்கள் கூடுதலாகப் போட்டியிட்டபோதிலும், முந்தைய தேர்தலில் 21 ஆக இருந்த வெற்றி எண்ணிக்கை, 12 ஆக குறைந்து, தலைகீழாக மாறியது. டெபாசிட் இழந்த பெண்களின் விகிதமும் 92 சதவீதமாக உயர்ந்தது; இது ஆண்களிடையே பதிவான 88 சதவீதத்தை விட அதிகமாகும். இன்று (மே 4) நடக்கும் வாக்கு எண்ணிக்கையில், 442 பெண் வேட்பாளர்களில் எத்தனை பேர் தங்கள் பங்கேற்பைத் தேர்தல் வெற்றியாக மாற்றுவார்கள் என்பதில் தற்போது கவனம் திரும்பியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com