“மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் சீட்டுகள்..” - அடுத்தடுத்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்.. எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம்!

ரூ.677 கோடி செலவில் முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம் உருவாக்கப்படும்...
cm speech in assembly
cm speech in assembly
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் நலன், மருத்துவம், கல்வி மற்றும் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிப் பணிகள் என பல்வேறு துறைகள் தொடர்பாக இந்த அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் ஆவின் பாலுக்கான விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்தார். இதன் மூலம் தற்போது ரூ.38-க்கு கொள்முதல் செய்யப்படும் பால், இனி ரூ.41-க்கு கொள்முதல் செய்யப்படும்.

பெரம்பூரில் ரூ.300 கோடியில் மருத்துவமனை

தொடர்ந்து, சென்னையின் பெரம்பூர் பகுதியில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார். மேலும், முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிகிச்சைக்கான தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.

7 புதிய செவிலியர் கல்லூரிகள்

மாநிலம் முழுவதும் 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதேபோல், ரூ.677 கோடி செலவில் முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம் உருவாக்கப்படும் என்றும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்கும் வகையில் ரூ.351 கோடி செலவில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.

அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு வாகனம்

இதனிடையே, தொகுதி சார்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்தார். வாகனத்தின் ஓட்டுநர், எரிபொருள் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும், ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் அலுவலகப் பணிகளுக்காக ஒரு உதவியாளரை நியமித்துக் கொள்ளலாம் என்றும், அதற்காக அரசு சார்பில் மாதம் ரூ.25,000 உதவியாளர் படியாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். பொதுமக்கள் மருத்துவ வசதி முதல் ஆவின் பால் கொள்முதல் விலை, புற்றுநோய் சிகிச்சை, மருத்துவக் கல்வி மற்றும் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிப் பணிகள் வரை பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்த அறிவிப்புகள் சட்டப்பேரவையில் கவனம் பெற்றுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com