தமிழக வெற்றிக் கழக அரசின் 2026-27ஆம் ஆண்டுக்கான முதல் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில், நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, அரசின் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், பெண்களின் திருமணத்தை முன்னிட்டு ‘அண்ணனின் சீர்’ என்ற புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் திருமணத்தை மகிழ்ச்சியான தருணமாக மாற்றும் வகையிலும், திருமணச் செலவில் குடும்பங்களுக்கு உதவும் வகையிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் உரையில் இதுகுறித்து பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், “திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் ஒரு மகிழ்ச்சியான தருணமாகும். இந்தத் தருணத்தைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டின் பெண்கள் அனைவரையும் தனது குடும்பத்தில் ஒருவராக கருதுகிறார் முதலமைச்சர்” என தெரிவித்தார்.
8 கிராம் தங்கம் + பட்டுப்புடவை
அதன்படி, திருமணம் நடைபெறும் பெண்களுக்கு அரசின் சார்பில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்குத் தேவையான முக்கிய செலவுகளில் ஒன்றாக ஆடை மற்றும் தங்கம் இருப்பதால், இந்த இரு பொருட்களையும் அரசின் சார்பில் வழங்குவதன் மூலம் திருமணமாகும் பெண்களின் குடும்பங்களுக்கு ஓரளவு நிதி உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வழக்கமாக குடும்பத்தில் திருமண நிகழ்வின்போது அண்ணன் சார்பில் வழங்கப்படும் ‘சீர்’ முறையை பிரதிபலிக்கும் வகையில், இந்தத் திட்டத்துக்கு ‘அண்ணனின் சீர்’ என பெயரிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கான திட்டங்களில் முக்கிய அறிவிப்பு
தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் பெண்கள் நலனை மையப்படுத்தி பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருமணமாகும் பெண்களுக்கு தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் இந்தத் திட்டம் முக்கிய அறிவிப்பாக இடம்பெற்றுள்ளது.
ரூ.812 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட உள்ள ‘அண்ணனின் சீர்’ திட்டத்தின் மூலம், திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயமும் ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்பட உள்ளது. தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள இந்த அறிவிப்பு தற்போது அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.