தமிழக வெற்றிக் கழக அரசின் 2026-27ஆம் ஆண்டுக்கான முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் முழுமையான பட்ஜெட்டாக இது அமைந்துள்ள நிலையில், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், கிராமப்புற மக்கள், தொழிலாளர்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கான திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை அவர்அறிவித்துள்ளார்.
பட்ஜெட் உரையை தொடங்கிய நிதியமைச்சர் மரிய வில்சன், “தனக்கு எல்லாம் கொடுத்த மக்களுக்காக நன்றிக்கடன் செலுத்துவதற்காக மட்டுமே அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர் விஜய். பல்வேறு சூழ்ச்சிகளை எதிர்த்து மாபெரும் சரித்திர வெற்றி பெற்று ஜனநாயகனாக அமர்ந்திருக்கிறார் முதலமைச்சர்” என்று குறிப்பிட்டார். மேலும், “அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூக நீதி, சமத்துவம், பெண்கள் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு, ஊழலற்ற நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரசு” என்பதே தவெக அரசின் கொள்கைகள் என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை அறிவித்த மரிய வில்சன், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை மையமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். அரசுப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், 10,000 அரசுப் பள்ளிகளில் ‘க்ளீன், சூப்பர் கேம்பஸ்’ திட்டம் முதற்கட்டமாக செயல்படுத்தப்படும் என்றும், இதற்காக ரூ.139 கோடி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார். “பள்ளிப் பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டு, கற்றல் வெளிப்பாடுகளில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உருவாக்கப்படும்” என தெரிவித்த மரிய வில்சன், இதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றார்.
மாணவர்களுக்கு சிறப்பான கல்விச் சூழலை உருவாக்கும் வகையில் ‘பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள்’ அமைக்கப்படும் என்றும், இதற்காக ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் 3,734 அரசுப் பள்ளிகள் ரூ.2,132 கோடி செலவில் நவீனமயமாக்கப்படும் என அறிவித்தார். தினசரி தூய்மைப் பணி, குடிநீர் வசதி, கழிப்பறை பராமரிப்பு மற்றும் 24 மணி நேர பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும் என்றார்.
மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில், அரசுப் பள்ளிகளில் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மரிய வில்சன் அறிவித்தார். கல்லூரி மாணவர்களின் டிஜிட்டல் கல்வியை மேம்படுத்தும் வகையில் மடிக்கணினித் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மாணவர்களின் தங்கும் வசதிகளை மேம்படுத்த சிறப்பு நோக்கு நிறுவனம் (SPV) அமைக்கப்பட்டு, அதற்காக ரூ.10 கோடி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார்.
விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வதை இலக்காகக் கொண்டு, மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் உருவாக்கப்படும் என்றும், இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் 5.32 லட்சம் மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதியுடன் நவீன மிதிவண்டிகள் வழங்கப்படும் என்றும், இதற்காக ரூ.277 கோடி ஒதுக்கப்படும் என்றும் மரிய வில்சன் அறிவித்தார். இளைஞர்களுக்கான போட்டித் தேர்வு பயிற்சியை அதிகரிக்கும் வகையில், அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையங்களிலும் SSC, RRB, IBPS உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும், இதற்காக ரூ.3.38 கோடி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
8 முதல் 18 வயதுக்குட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களில் விளையாட்டுத் திறமை கொண்டவர்களைத் தேர்வு செய்து உலகத்தரமான விளையாட்டுப் பயிற்சி வழங்கப்படும் என்றும், இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்றும், இதற்காக ரூ.42 கோடி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு நூலகங்கள் டிஜிட்டல் நூலகங்களாக மறுவடிவமைக்கப்படும் என்றும், இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் மரிய வில்சன் கூறினார். எதிர்கால வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான திறன்களை இளைஞர்களிடம் உருவாக்கும் வகையில், 2031ஆம் ஆண்டுக்குள் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
கருவுற்ற பெண்களுக்காக தமிழ்நாடு முழுவதும் சேவை மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்படும் என்றும், அங்கு கட்டணமில்லா உணவு, மருத்துவ உதவி மற்றும் தொடர் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்படும் என்றும், இதற்காக ரூ.23 கோடி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மூத்த குடிமக்களுக்காக மாநிலம் முழுவதும் 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார். ஒவ்வொரு மையத்திலும் மருத்துவர், செவிலியர் மற்றும் இயன்முறை மருத்துவர் இடம்பெற்று கிராமப் பகுதிகளுக்கே சென்று சேவை வழங்குவார்கள். இதற்காக ரூ.33 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றார்.
கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் தலா 5 ஆடுகள் வழங்கப்படும் என்றும், இதற்காக ரூ.110 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் மரிய வில்சன் அறிவித்தார். பெண்களின் திருமணத்தை முன்னிட்டு ‘அண்ணனின் சீர்’ திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், திருமணம் நடைபெறும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும் என்றும், இதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
புதிய மாநில வீட்டுவசதித் திட்டமாக ‘வெற்றி வீடு’ திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், ஒரு வீட்டுக்கான தொகை ரூ.3.10 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் அறிவித்தார். முதல் ஆண்டிலேயே 70 ஆயிரம் வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, இத்திட்டம் ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்றார். ஊரக வளர்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் ‘TN-VETRI’ திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், நகர்ப்புறங்களை ஒட்டிய கிராமங்களுக்காக ரூ.1,000 கோடியும், மலைப்பகுதி ஊராட்சிகளுக்காக ஆண்டுதோறும் ரூ.100 கோடியும் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு மொத்தம் ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றார்.
மனித - வனவிலங்கு மோதலைத் தடுக்கும் வகையில் 100 கிராமங்களில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், சூரிய மின்வேலி, எஃகு வேலி உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். GPS வசதியுடன் கண்காணிப்பு மற்றும் இரவு நேர ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.20 கோடி ஒதுக்கப்படும் என்றார். கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ‘TN-SHORE’ திட்டத்தின் கீழ் 2,500 ஹெக்டேர் பரப்பளவில் புதிய அலையாத்திக் காடுகள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இதற்காக ரூ.40 கோடி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ‘வெற்றி 150’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், ஏற்கனவே 125 நாட்கள் வேலை முடித்த குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்கப்பட்டு, மொத்தம் 150 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என்றும் மரிய வில்சன் அறிவித்தார். இதற்காக ஆண்டுதோறும் ரூ.100 கோடி ஒதுக்கப்படும் என்றார். மகளிர் சுயஉதவிக் குழுக்களை குறுந்தொழில் நிறுவனங்களாக மேம்படுத்தும் வகையில் ‘சிங்கப்பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டம்’ தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் நடப்பு ஆண்டில் ரூ.38,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பாக செயல்படும் சுயஉதவிக் குழு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ அமைக்கப்பட்டுள்ளதாகவும், பெண்கள் தலைமையிலான காவல் பணிகள், அவசரகால நடவடிக்கைகள் மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் இந்தப் படை ஈடுபடும் என்றும் மரிய வில்சன் தெரிவித்தார். இதற்காக ரூ.354 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறினார். போதைப்பழக்கத்திலிருந்து மீள விரும்புவோருக்கு உதவும் வகையில் ‘போதையில்லா தமிழகம்’ திட்டத்தின் கீழ் ‘மறுவாழ்வு நிதி’ உருவாக்கப்படும் என்றும், மறுவாழ்வு உதவிகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இதற்காக ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இறுதியாக, சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் புதிய சாலை பாதுகாப்புக் கொள்கை உருவாக்கப்படும் என்று மரிய வில்சன் அறிவித்தார். நிறுவன அமைப்புகள், சாலை வடிவமைப்பு மற்றும் பொறியியல், போக்குவரத்து சட்ட அமலாக்கம், அவசரகால சிகிச்சை மற்றும் விழிப்புணர்வுக் கல்வி ஆகிய 5 முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்டு இக்கொள்கை உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார். முதலமைச்சர் விபத்து நிவாரண நிதிக்கு ரூ.200 கோடியும், சாலைப் பாதுகாப்புப் பணிகளுக்கு ரூ.130 கோடியும் என மொத்தம் ரூ.330 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் மரிய வில்சன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.