மெட்ரோ திட்டங்கள் முதல் தமிழுக்கு அங்கீகாரம் வரை.. பிரதமரிடம் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

இதில், ரூ.3,700 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களும் அடங்கும்...
Vijay IIT Madras Speech
Vijay IIT Madras Speech
Published on: 
Updated on: 
1 min read

சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் விஜய், மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும் போது, அதன் பலன்கள் நேரடியாக மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், கல்வி, வேளாண்மை, திருநர் நலன் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

இன்று வடபழனியில் இருந்து பூந்தமல்லி வரை செல்லும் மெட்ரோ திட்டத்தை தொடங்கி வைக்க வந்த பிரதமர் அடுத்து சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில், ரூ.3,700 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களும் அடங்கும். மேலும், சுமார் ரூ.750 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், புனரமைக்கப்பட்ட ஐந்து ரயில் நிலையங்களையும் திறந்து வைத்தார். பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

விழா தொடங்கியதும் முதலில் தேசிய கீதமும், தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டன. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் விஜய், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அமைச்சர் என்.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய், பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். மேலும், தொன்மையான பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் உயிர்ப்புடன் பேணிப் பாதுகாத்து வரும் மாநிலமாகத் தமிழகம் திகழ்வதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தின் சார்பிலும் மக்களின் சார்பிலும் பிரதமரை வரவேற்பதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “அனைவருக்குமான அரசாக நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது. கல்வி, வேளாண்மை, திருநர் நலன் என ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலனையும் இலக்காகக் கொண்டு அனைத்து தரப்பினருக்குமான அரசாகச் செயல்பட்டு வருகிறோம். இந்தியாவின் முன்னேற்றத்திற்குத் தமிழகம் என்றைக்கும் துணையாக நிற்கும்” என்றார். மேலும், “மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும்போது, அதன் பலன்கள் நேரடியாக மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதே நமது அணுகுமுறை” என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.

மேலும் சென்னையின் வளர்ச்சி மட்டுமின்றி, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வளர்ச்சியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து நிறைவேற்ற வேண்டும் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com