“நிதியமைச்சர் தான்.. இங்கிலாந்து அரசர் அல்ல” - வழக்கில் ஆஜராக விலக்கு கேட்ட மரிய வில்சன்.. உயர்நீதிமன்றம் கடும் கேள்வி!

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி வழக்கில் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது...
Maria Wilson High Court
Maria Wilson High Court
Published on
Updated on
2 min read

புதுச்சேரியில் தனது சகோதரர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, அமைச்சர் பதவியில் இருப்பதை காரணம் காட்டி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய அவரது தரப்புக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் கடும் கேள்விகளை எழுப்பினார். கடந்த 2022-ம் ஆண்டு புதுச்சேரியில் மரிய வில்சனின் சகோதரர் மரிய குலோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் கிளாட் ஆகியோர் வசித்து வந்த வீட்டில் தாக்குதல் நடைபெற்றதாக புகார் அளிக்கப்பட்டது. குடும்ப சொத்து தொடர்பான பிரச்னையின் பின்னணியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கதவை உடைத்ததுடன், அங்கிருந்தவர்களை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மரிய வில்சன் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மரிய குலோத் தரப்பினர் போலீசில் புகார் அளித்தனர். முதற்கட்டமாக சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை சுட்டிக்காட்டி கூடுதல் மற்றும் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என புகார்தாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி வழக்கில் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக மரிய வில்சன் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவருக்கு எதிரான இந்த வழக்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணையின் ஒரு கட்டத்தில் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக மரிய வில்சனுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர் பதவியில் இருப்பதால் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த நான்கு முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும், எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரி போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி மரிய வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு நடைபெற்றது. அப்போது, மரிய வில்சன் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரப்பட்ட விவகாரம் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அமைச்சர் பதவியில் இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனக் கூற முடியுமா என நீதிபதி கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “மனுதாரர் மாநிலத்தின் நிதியமைச்சர்தான்; இங்கிலாந்தின் அரசர் அல்ல அதற்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க முடியாது” என நீதிபதி கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில்கூட நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அமைச்சர் பதவிக்கு வருவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரர், தற்போது பதவிக்கு வந்த பிறகு ஏன் ஆஜராக மறுக்கிறார் என்றும் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் என்பதால் சட்டத்தின் முன் சிறப்பு சலுகை கிடையாது என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியதாக கூறப்படும் நிலையில், மரிய வில்சன் எந்த தேதியில் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் என்பதை பிற்பகல் தெரிவிக்குமாறு அவரது தரப்புக்கு உத்தரவிடப்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com