“ஈரான் போர் தான் காரணம்” - அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு .. உதயநிதி குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் பதில்!

துவரம் பருப்பு ரூ.150-ல் இருந்து ரூ.180 ஆகவும், சர்க்கரை ரூ.40-ல் இருந்து ரூ.70 வரையும் உயர்ந்துள்ளதாக உதயநிதி சுட்டிக்காட்டினார்...
Essential Commodities Prices
Essential Commodities Prices
Published on
Updated on
2 min read

மாநிலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் குற்றம்சாட்டிய நிலையில், விலைவாசி உயர்வுக்கு ஈரான் போர் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வும் முக்கிய காரணம் என உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் உள்துறை, மதுவிலக்கு, போக்குவரத்து மற்றும் வீட்டு வசதித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர், அரிசி, வெங்காயம், துவரம் பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த சில மாதங்களில் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், மே மாதத்தில் ரூ.55-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ அரிசி தற்போது ரூ.75 வரை உயர்ந்துள்ளதாகவும், ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் ரூ.80 ஆகவும், துவரம் பருப்பு ரூ.150-ல் இருந்து ரூ.180 ஆகவும், சர்க்கரை ரூ.40-ல் இருந்து ரூ.70 வரையும் உயர்ந்துள்ளதாக உதயநிதி சுட்டிக்காட்டினார்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் அளவை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் விலைவாசி உயர்வு தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் ஈடுபட்டார். இதற்கு பதிலளித்து உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய அமைச்சர், தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு சர்வதேச அளவிலான காரணிகளும் இருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக, ஈரான் போர் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவை அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன எனக் கூறினார். மேலும், சர்க்கரையின் விலை தமிழகத்தில் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் உயர்ந்துள்ளதாகவும், அதிகளவில் சர்க்கரை உற்பத்தி செய்யப்படும் மகாராஷ்டிரா மாநிலத்திலும் விலை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் அரிசி, சர்க்கரை, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட 41 அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தினசரி அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள விலை கண்காணிப்புக் குழு வாரந்தோறும் கூடி, எந்தெந்த பொருட்களின் விலை அதிகரித்துள்ளது, அதற்கான காரணம் என்ன, விலையை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், பண்டிகை கால தேவைகள் காரணமாக விலை உயர்ந்துள்ளதா, ஈரான் போரின் தாக்கமா அல்லது விளைச்சல் குறைந்ததன் காரணமாக விலை அதிகரித்துள்ளதா என்பது உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com