தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் இன்று அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். அப்போது, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை இனியும் தாமதிக்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியதும், தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானத்தை முதல்வர் ஜோசப் விஜய் முன்மொழிந்தார். தீர்மானத்தின் மீது உரையாற்றிய அவர், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தினார்.
அதன் ஒரு பகுதியாக, பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் குறித்தும் முதல்வர் விஜய் பேசினார். “தமிழகத்தின் பெண்களுக்காக பேசுகிறேன். தமிழ்நாட்டில் பெண் ஆளுமைகள் நிறைய பேர் உள்ளனர். எனது இந்த நிலைக்கு அம்மா, அக்கா, தங்கை, பாட்டிகள் தான் காரணம்” என அவர் குறிப்பிட்டார். மேலும், “தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் வாக்களித்தனர். அவர்களுக்கு நன்றி, விசுவாசத்துடன் இங்கு நின்று பேசுகிறேன்” என்றும் முதல்வர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். 2021-ம் ஆண்டு சட்டப்பேரவையில் 12 பெண் உறுப்பினர்கள் இருந்த நிலையில், 2026-ம் ஆண்டு சட்டப்பேரவையில் 23 பெண்கள் இடம்பெற்றுள்ளதாகவும், தற்போது 4 பெண்கள் அமைச்சர்களாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருப்பதாகக் குறிப்பிட்ட முதல்வர், பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல என்றும், அது சமூக நீதியின் ஒரு பகுதியாகும் என்றும் தெரிவித்தார். “நாட்டின் மக்கள் தொகையில் பாதி பேர் பெண்கள். எனவே, பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை இனியும் தாமதிக்காமல் செயல்படுத்த வேண்டும்” என முதல்வர் ஜோசப் விஜய் வலியுறுத்தினார். மேலும், தற்போதுள்ள மக்களவைத் தொகுதிகளின் அடிப்படையிலேயே பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறையைக் காரணம் காட்டி பெண்களுக்கான இடஒதுக்கீட்டை தாமதப்படுத்தக் கூடாது என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்