பெங்களுருவில் கண்டறியப்பட்ட தமிழ்நாடு இளைஞரின் உடல்..! அடையாளங்களை வெளியிட்டுள்ளது காவல்துறை..!
தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு பெங்களூருவில் உடல் வீசப்பட்டுள்ள நிலையில் அவர் யார் என்று கண்டுபிடிக்க அவரது அங்க அடையாளங்களை வெளியிட்டுள்ள காவல் துறை.
பெங்களூரு நகரில் பெலந்தூர் பகுதியில் உள்ள ஹர்யானா அடுக்குமாடி குடியிருப்பு அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் கடந்த 9 ஆம் தேதி இளைஞர் ஒருவரது உடல் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இளைஞர் மரணம் தொடர்பாக மாரத்த ஹள்ளி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இளைஞரின் அடையாள அட்டை எதுவும் இல்லாத நிலையில் இறந்த இளைஞர் யார் என்பதை கண்டுபிடிக்க காவல்துறை திணறி வருகிறது. இந்நிலையில் அவரது உடலில் தமிழ் மொழியில் கௌதம் நித்தியா பச்சை குத்தியிருப்பதால் இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என காவல்துறை கருதி அவரது அங்க அடையாளங்களை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடி வருகிறது.
இறந்தவர் வயது 28 முதல் 35 வரை இருக்கலாம் என்றும் கடந்த ஒன்பதாம் தேதி உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஆறாம் தேதி முதல் 7ஆம் தேதிக்குள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இறந்தவர் உயரம் 5.2 அடி உயரம் கொண்டவர், கருப்பு நிறம் மேலும் கட்டு மஸ்தான உடல் கொண்டவர் என்பதால் இவர் தொடர்ந்து ஜிம் செல்பவராக இருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. அவரது கையில் கௌதம் நித்தியா என தமிழ் மொழியில் பச்சை குத்தியிருப்பது மட்டுமில்லாமல் ஆங்கிலத்தில் ஏ எஸ் கே என்றும் பச்சை குத்தப்பட்டுள்ளது.
மேலும் அவரது கையில் நடு விரல் பாதியாக உள்ளது. இந்த அடையாளங்களை யாரேனும் கண்டு கொண்டால் உடனடியாக வைட் ஃபீல்ட் பகுதி கட்டுபாட்டு அறைக்கு 07411747100 தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க | டிஜிட்டல் பண பரிவர்த்தனை: உலகத் தரவரிசையில் இந்தியா முதலிடம்..!