

“வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு” என தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்பு பெயர் உண்டு. எத்தனையோ லட்சம் மக்கள் இங்கு வந்து உழைத்து, வாழ்ந்து வருகின்றனர். மேலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு புலம்பெயர் தொழிலாளர்களாக இங்கு வேலைபார்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக வட இந்தியர்கள் தமிழகத்தின் அனைத்து மட்ட பணிகளிலும் இருந்து வருகின்றனர். குறிப்பாக இங்கு 6.5 லட்சம் பீகாரிகள் தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 2011 -லிருந்து இந்திய தேர்தல் களம் மத மற்றும் இன அடிப்படையிலான பிரச்சாரங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. அந்தவகையில் கடும் சர்ச்சைகளுக்கு இடையில் பிகார் தேர்தல் வருகிற நவம்பர் 6 -லிருந்து 11 வரை நடைபெற உள்ளது. சிறப்பு வாக்காளர் திருத்த விவகாரமே அங்கு பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், NDA கூட்டணியும், INDIA கூட்டணியும் தங்களின் தேர்தல் பிரச்சாரங்களை துவங்கியுள்ளது. இந்நிலையில் பிகார் மாநிலம் முசாபர்பூரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய பிரதமர் மோடி, வடமாநிலங்களில் கொண்டாடப்படும் சாத் பண்டிகையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்க முயற்சி செய்து வருவதாகக் கூறினார். ஆனால், வாக்கு அரசியலுக்காக காங்கிரஸும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் சாத் தேவியை அவமதித்து விட்டதாகவும், அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் “தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்களை திமுகவினர் அவமதிப்பதாகவும், துன்புறுத்துவதாகவும் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது பெரும் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இந்த சர்ச்சைகளுக்கு பாஜக தரப்பிலிருந்து தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
“முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வன்மையான கண்டனங்கள், இந்தியாவில் தென்திந்தியர்களையும் வட இந்தியர்களையும் திமுக தான் பிரித்து பார்க்கிறது. நேற்றைய தினம் பிரதமர் குற்றஞ்சாட்டியது திமுக -வைத்தான் தமிழர்களை அல்ல. தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தோர் திமுக -வினரால் கீழ்த்தரமாக நடத்தப்படுகின்றனர் என்ற உண்மையைத்தான் அவர் எடுத்து கூறியுள்ளார். திமுக -வில் எத்தனை மந்திரிகள் பச்சை தமிழர்கள். பீகாரிகள் அறிவில்லாதவர்கள், அறிவற்றவர்கள் என திமுக அமைச்சர்கள் பேசி வருகின்றனர்” - என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.
