
அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம் தொட்டுள்ள நிலையில் அனைத்து கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 20-ம் தேதிக்குள் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதேசமயம் இறுதியாண்டு மாணவர்கள் இறுதி பருவ தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட மாட்டாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'ஆன்லைன் செமஸ்டர் தேர்வை இருபது இலட்சத்து 875 மாணவர்கள் எழுதுகின்றனர். கடந்த நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு ஆன்லைனிலும், இறுதி செமஸ்டர் தேர்வு நேரடியாகவும் நடைபெறும். அரியர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடைபெறும். இதன் மூலம் பல்கலைக்கழகங்களில் பயிலும் 52,307 மாணவர்களும், நான்கு இலட்சத்து 51 ஆயிரம் பொறியியல் மாணவர்கள் பயன்பெறுவார்கள். மேலும் ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறுவதால் பனிரெண்டு இலட்சத்து 94 ஆயிரம் கலைக்கல்லூரி மாணவர்கள் பயனடைவார்கள், அதேபோல் ஒரு லட்சம் 96 ஆயிரம் பாலிடெக்னிக் மாணவர்களும் பயனடைவார்கள்' என்று விளக்கமளித்துள்ளார்.