செப்டம்பர் 5... ஆசிரியர் தினம்...
சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமே ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் 1888-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி வீராசாமி ஐயர் மற்றும் சீதம்மா தம்பதியரின் மகனான பிறந்தார் ராதாகிருஷ்ணன்.
சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவரும், 2-வது குடியரசுத் தலைவருமானவர் ராதாகிருஷ்ணன்.
அவரது பிறந்த நாளை நாடே ஆசிரியர் தினமாக கொண்டாடி வரும் நிலையில், இவர் படித்த பள்ளி பற்றி எத்தனை பேருக்கு தெரியும்...
இன்றைய ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்தான், அன்று ராதாகிருஷ்ணன் பயின்றார் என்றால் நம்ப முடிகிறதா உங்களால்...
தமிழகத்தின் முதல் நகராட்சியான வாலாஜாவில் அரசு பள்ளி தொடங்கப்பட்டது.
1867-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளி, நகராட்சி நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.
இந்த வாலாஜா அரசு பள்ளியில்யில்தான் டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்வி பயின்றார். இதற்காக அவர் வாலாஜாவில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்து பள்ளி படிப்பை முடித்தார்.
இந்த பள்ளி அந்த காலத்திலேயே மிகத்தரம் வாய்ந்த பர்மா தேக்குகளால் மேற்தளம், மாடிபடிக் கட்டுகள் அமைக்கப்பட்டன.
இந்த பள்ளியில் இவர் மட்டுமின்றி, தமிழ் மூதறிஞர் மு.வ. என்கிற மு.வரதராசனார், முன்னாள் தலைமை செயலாளரும் மிசோரம் மாநில ஆளுநராக இருந்தவருமான பத்மநாபன், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சம்பத், ஐ.ஏ.எஸ் அதிகாரி வன்னிவேடு விசுவநாதன் உள்ளிட்ட சாதனையாளர்கள் பலர் இந்த பள்ளியில் கல்வி பயிறுள்ளனர் என்பது இப்பள்ளியின் கூடுதல் சிறப்பு...
கடந்த 1920-ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் திவான் பகதூராகவும், கவுன்சில் உறுப்பினராகவும் இருந்த ராஜகோபாலாச்சாரியார் முயற்சியினால், High school என்பதை குறிக்கும் வகையில், "H" வடிவில் பெரிய அளவில் கட்டிடம் கட்டப்பட்டது.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 1949-ல் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. சுதந்திர இந்தியாவின் வரைபடம் பூமியில், சிமென்ட்டால் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டது.
தற்போது, இந்த வரலாற்று சின்னங்கள் எல்லாம் சிதிலமடைந்து காணப்படுகிறது.
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த பள்ளிக்கட்டடம் தற்போது, பழுதடைந்து காணப்படுகிறது.
மேலும் கட்டத்தின் ஒரு சில பகுதிகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவர் படித்த பள்ளியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த பள்ளிக் கட்டத்தை சீரமைத்து, இப்பள்ளியின் பெருமைகளான ராதாகிருஷ்ணன் மற்றும் மு. வரதராசர் சிலைகளை நிறுவி, நினைவு இல்லம் அமைக்கப்பட வேண்டும் என்பதை முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.
ஆசிரியர் தினத்தை கொண்டாடும் இந்த நாளில் இப்பள்ளியை சீரமைப்பதே உண்மையான ஆசிரியர் தின கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.