ஆட்சியர் அலுவலகத்தை அதிரவைத்த ஆசிரியர்கள்! வலுக்கட்டாயமாகத் தூக்கிய போலீஸ்! சென்னையில் பரபரப்பு!

தற்போது வழங்கப்படும் ஊதியத்திற்கும் இடையே பெரும் வித்தியாசம் இருப்பதாக அவர்கள் வேதனை...
ஆட்சியர் அலுவலகத்தை அதிரவைத்த ஆசிரியர்கள்! வலுக்கட்டாயமாகத் தூக்கிய போலீஸ்! சென்னையில் பரபரப்பு!
Admin
Published on
Updated on
2 min read

சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்முறை போராட்டக்காரர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்துள்ளதால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. கடந்த சில நாட்களாகவே டிபிஐ வளாகம் முன்பு போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்து அப்புறப்படுத்திய நிலையில், இன்று போராட்டத்தின் வடிவம் மாறியுள்ளது. காவல்துறையினரின் கணிப்பை மீறி, ஆசிரியர்கள் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்ததால் காவல்துறையினர் திக்குமுக்காடிப் போயினர்.

இந்த இடைநிலை ஆசிரியர்கள் முன்வைக்கும் முக்கிய கோரிக்கையானது, கடந்த 2008 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 220 தொடர்பானதாகும். அதாவது, 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை என்பதே இவர்களின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்த ஊதிய விகிதத்திற்கும், தற்போது வழங்கப்படும் ஊதியத்திற்கும் இடையே பெரும் வித்தியாசம் இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சுமார் 15 ஆண்டுகளாகத் தாங்கள் குறைவான ஊதியத்தையே பெற்று வருவதாகவும், இதனால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாகவும் ஆசிரியர்கள் கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றனர்.

Admin

குறிப்பாக, ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைக்குப் பிறகு ஊதிய முரண்பாடு 3,120 ரூபாயாக அதிகரித்ததாகவும், தற்போது ஏழாவது ஊதியக் குழுவின் படி இந்த வித்தியாசம் மேலும் அதிகரித்து 12,000 ரூபாய்க்கும் மேல் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த ஊதிய முரண்பாடு களையப்படும் என்றும், தேர்தல் வாக்குறுதி எண் 311-ன் படி கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்திருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்று ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும், பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற போராட்டங்களின் போது காவல்துறையினர் ஆசிரியர்களைக் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. இன்றும் அதேபோன்ற ஒரு சூழ்நிலை நிலவுவதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றிலும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களின் இந்தத் திடீர் முற்றுகைப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்துப் நெரிசலும், பரபரப்பான சூழலும் காணப்படுகிறது. அரசு உடனடியாகத் தலையிட்டுத் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com