
72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை மூலம் கடையநல்லூர் நகராட்சி, சொக்கம்பட்டி ஊராட்சி ஆகியவை குடிநீர் வசதி பெற்று வருகின்றன.
மேலும் பெருங்கால்வாய், பாப்பான் கால்வாய், சீவலன் கால்வாய், இடைகால் கால்வாய், கிளாங்காடு கால்வாய், ஊர்மேலழகியான் கால்வாய் ஆகியவற்றின் மூலம் 72 குளங்களுக்கு தண்ணீர் செல்வதன் மூலம் சுமார் பத்தாயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் பருவ மழை பொய்த்ததால் நீர்வரத்தின்றி கருப்பாநதி அணை வறண்டு பாலைவனமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில் போதிய நீரின்றி அணையில் மீன்கள் செத்து மிதக்கின்றன. கடும் துர்நாற்றம் வீசுவதால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.