
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களின் வெற்றியை உறுதி செய்ய பம்பரமாக சுழன்றுகொண்டு இருக்கின்றன. ஆளுங்கட்சியான திமுக ஆட்சிக் கட்டிலிருந்து இறங்கத் தயாராக இல்லை. அவர்களின் கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்தாலும் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக -வின் சண்டை மூலைமுடுக்குகளில் எல்லாம் பேசுபொருளாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 11 அதிமுக -வும் பாஜக -வும் தங்களின் கூட்டணியை உறுதி செய்தன. ஆனால் கூட்டணி வைத்த நாளிலிருந்தே அதிமுக -பாஜக கூட்டணி அடிமட்ட அளவில் ஒன்றிணையவில்லை என்ற கூற்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அதையெல்லாம் சரிசெய்து இப்போதுதான் இரு கட்சிகளும் தங்களின் ஒற்றுமையை உறுதி செய்து வருகின்றனர். ஆனால், சமீபத்தில், NDA கூட்டணியிலிருந்து ஒவ்வொருவராக கழன்றுகொண்டு வரும் போக்கும் நிகழ்கிறது.
இத்தகு பரபரப்பான சூழலில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அமித்ஷாவை சந்தித்தார். அவர் அமித்ஷாவை சந்தித்து வந்ததே பெரும் பேசுபொருளாக மாறியது. அதற்கு காரணம், எடப்பாடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஒரு மணி நேரம் தனிமையில் உரையாடலை நடத்தினார். பிறகு வெளியில் வந்த எடப்பாடி செய்தியாளர்களை சந்திக்காமல் முகத்தை கைக்குட்டையை வைத்து முகத்தை மறைத்துக்கொண்டதாக பல தகவல் வெளியாகின.
நேற்று நடந்த கரூர் கூட்டத்தில் கூட முதல்வர் மு.க.ஸ்டாலின் “முழுவதும் நனைந்த பிறகு’ முக்காடு எதற்கு என கடுமையாக விமர்சித்திருந்தார். அதுமட்டுமின்றி டிடிவி தினகரனும் “முகமூடி எடப்பாடியார்” என கலாய்த்து தள்ளியிருந்தார்.
இந்த செய்தி பழனிச்சாமியை மிகவும் கடுமையாக பாதித்திருப்பதாகவே தோன்றுகிறது, அதற்கு காரணம், இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பு, இதில், “நான் முகத்தை துடைத்ததை இவ்வளவு பெரிய செய்தியாக மாற்ற வேண்டுமா? அந்த அளவுக்கு ஊடகம் தரம் தாழ்ந்து போய்விட்டதா? நான் இனிமேல் Rest room போனால் கூட உங்களிடம் சொல்லிவிட்டு போகிறேன்” என்று காத்திரமான விமர்சனங்களை முன்வைத்தார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முகத்தை கைக்குட்டையால் மூடியிருந்ததை வீடியோ ஆதாரத்தோடு செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் நிரஞ்சன் குமார் -க்கு எதிராக அதிமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் பெரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் தங்களின் கண்டனத்தை பதிவு செய்தது, இதில் “டெல்லியில் வசிக்கும் பத்திரிகையாளர் திரு.நிரஞ்சன் குமார் பல்வேறு முன்னணி தமிழ் ஊடகங்களில் பணியாற்றியவர். தற்போது “தி கேபிடல்” என்ற டிஜிட்டல் ஊடகத்தை நடத்தி வருகிறார். அத்துடன், பல்வேறு ஊடகங்களுக்கு தலைநகர் டெல்லியில் நடைபெறும் செய்திகளையும் வழங்கிவருகிறார்.
இந்நிலையில், நேற்று (16.09.25) அதிமுக பொதுச் செயலாளர் திரு.எடப்பாடி பழனிச்சாமி, உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களை டெல்லியில் சந்தித்த நிகழ்வு குறித்து திரு.நிரஞ்சன் குமார் செய்தி சேகரிக்கச் சென்றுள்ளார்.
அப்போது, சந்திப்பை முடித்துவிட்டு காரில் வெளியே வந்த திரு.எடப்பாடி பழனிச்சாமி முகத்தை கைகுட்டையால் முடியிருந்தது குறித்த செய்தியை வீடியோ ஆதரத்துடன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த செய்தி அனைத்து முன்னணி ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. அதிமுக தரப்பில், திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கைகுட்டையால் முகத்தை துடைத்தார் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த விளக்கமும் ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இந்த செய்தியை வெளியிட்டதற்காக அதிமுக சார்பாக திரு.நிரஞ்சன் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக, அதிமுக சமூக வலைதளப் பிரிவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தகவல் பகிரப்பட்டுள்ளது. அத்துடன் தலையும் இல்லாத, வாலும் இல்லாத அந்த மொட்டை கடிதமும் அத்துடன் பகிரப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், திரு.நிரஞ்சன் குமார் அவர்களுக்கு எதிராக, எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவரை மிகவும் தவறாகவும், கீழ்த்தரமாகவும் விமர்சித்துள்ளனர். மேலும், திரு.நிரஞ்சன் குமாரை மிரட்டும் வகையிலும் அமைந்துள்ளது. பத்திரிகையாளர் திரு.நிரஞ்சன் குமார் அவர்களை மிரட்டும் வகையில் நோட்டீஸ் அனுப்பியுள்ள அதிமுகவின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
அந்த கடிதம், திரு.நிரஞ்சன் குமார் மட்டுமில்லாமல் பத்திரிகையாளர்கள் அனைவரையும் அச்சுறுத்தும் வகையிலும், சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கும், விகடன் நிறுவனத்திற்கும் எதிராக கீழ்த்தரமான கருத்தை தெரிவித்த பாஜக மாநிலத்தலைவர் திரு.நைனார் நாகேந்திரன். தெரிவித்த கருத்தை வரவேற்கும் வகையிலும் அமைந்துள்ளது. தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுகவிடமிருந்து பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் வகையிலும், கருத்துச் சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் இப்படி ஒரு கருத்து வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது” என குறிப்பிடப்பட்டிருந்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.