

தமிழக வெற்றிக் கழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள திட்டங்களில் அதிக விமர்சனங்களைப் பெற்றது ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் வகையில், ஆண்டுக்கு ரூ.755.83 கோடி மதிப்பில் இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதியன்று, இந்தத் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார்.
இதற்கான டெண்டரில், கேரளாவை மையமாகக் கொண்ட பிரபல நகை நிறுவனமான ஜோயாலுக்காஸ், வெறும் ஒரு பைசா கோரி எல்1 (L1) நிறுவனமாக உள்ளது.
மற்ற நகைக் கடைகள் இதற்கு ரூ.400 முதல் ரூ.15 ஆயிரம் ரூபாய் வரை கோரியிருக்கும் சூழலில் ஒரு பைசா என்பது லாபகரமானதாக இருக்காது.
தங்கத்தின் விலையைத் தவிர்த்து, செய்கூலி, ஹால்மார்க், பேக்கிங், காப்பீடு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து கூடுதல் கட்டணங்களுக்கும் சேர்த்து வெறும் ஒரு பைசாவை மட்டுமே கோரியுள்ள இந்நிறுவனத்திற்கு, விரைவில் அதிகாரப்பூர்வ கொள்முதல் ஆணை வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜோயாலுக்காஸ் (Joyalukkas) நிறுவனம் உலகளவில் முன்னணி நகைச் சில்லறை விற்பனை நிறுவனங்களில் ஒன்றாகும்.
இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் வளைகுடா நாடுகள் என 13 நாடுகளில் 200-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. இதன் தலைமையகங்கள் கேரளாவின் திருச்சூரிலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரிலும் உள்ளன.
இந்த நிறுவனம் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் டெண்டருக்கு விண்ணப்பித்ததில் கவனம் பெற்ற விஷயம், 2012ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் கடை திறப்பு நிகழ்ச்சிக்கு விஜய் சென்றுள்ளார் என்பதுதான்.
மேலும் 2010ஆம் ஆண்டு முதல், மற்றொரு அலுக்காஸ் சகோதரரின் நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராக விஜய் செயல்பட்டுள்ளார். அந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் அவரது தயாருடன் இணைந்தும் நடித்திருக்கிறார். அத்துடன், ஜோஸ் ஆலுக்காஸின் தூதராக செயல்பட்டபோது கடை திறப்பு நிகழ்வுகளுக்கும் சென்றுள்ளார்.
ஜோயாலுக்காஸ் தங்க நகை நிறுவனத்தின் தலைவர் ஜாய் ஆலுக்காஸ், முதலமைச்சர் விஜய்யுடன் நட்புறவு பேணும் சூழலில், இந்த டெண்டர் சிலரது புருவங்களையும் உயர்த்தியிருக்கிறது.
இதனால் நிறுவனத்துக்கு ஏற்படும் நஷ்டம் எப்படி ஈடு செய்யப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால், ஆட்சிக்கு வந்தது முதல் முதலமைச்சர் தனது நண்பர்கள் பலருக்கு பதவிகளை வழங்கியிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது முதலே, அரசின் நிதி நெருக்கடிக்கும், தினசரி உயர்ந்து வரும் தங்கத்தின் விலைக்கும் இடையே இது சாத்தியம்தானா என்ற கேள்வி எழுந்தது.
கடந்த ஜூன் 23ஆம் தேதி அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, மாநில அரசின் கீழ் செயல்படும் அனைத்து அரசு சுகாதாரக் கட்டமைப்புகளிலும் சேர்த்து ஆண்டுக்கு 4.2 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன.
எனில், 4.2 லட்சம் கிராம், அதாவது 420 கிலோ தங்கம் தேவைப்படலாம். இன்றைய விலை நிலவரப்படி, 22 கேரட் (ஆபரணத் தங்கம்) ஒரு கிலோவின் விலை ரூ.1.46 கோடி. மொத்த தங்கக் கொள்முதல் செலவு மட்டும் ரூ.613.2 கோடி எனக் கணக்கிடப்படுகிறது. இதனுடன் நிர்வாகச் செலவுகளையும் கணக்கிட்டு, ரூ.755.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவும், கண்காணிக்கவும் பிரத்யேக நிர்வாக அமைப்பு அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. நிர்வாகச் செலவில் கண்காணிப்பு, போக்குவரத்து, மதிப்பீடு, பயன்பாட்டுப் பொருட்கள், மென்பொருள் ஆகியவை அடங்கும் எனவும் அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவது இது முதன்முறை அல்ல. நீண்டகாலமாகத் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் (மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம்) செயல்பாட்டில் இருந்தது.
ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்பந்தம் எடுக்க எந்த நிறுவனமும் முன்வராமல் போனதாலும், கொரோனா பெருந்தொற்றினாலும் இந்தத் திட்டம் தடைபட்டது.
பின்னர், 2021ஆம் ஆண்டு இது நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக, 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில், 2018-2019ஆம் ஆண்டில் இருந்தே தங்கம் வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டதாக, அப்போது சமூக நலத்துறை அமைச்சராக இருந்த கீதா ஜீவன் தெரிவித்தார்.
இதேபோன்ற தடங்கல்கள் இந்த ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்துக்கும் ஏற்படலாம் என்கிற அச்சம் நிலவியது. இந்த நிலையில், தங்கக் கொள்முதல் விலையைக் கடந்த அனைத்து செலவுகளுக்கும் ஒரு பைசா எனக் குறிப்பிட்டு டெண்டரில் முன்னிலை வகிக்கிறது ஜோயாலுக்காஸ்.
இந்தத் திட்டம் தொடரும்போது, அரசின் பொருளாதாரத்தில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தலாம் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
குறிப்பாக, அடுத்தடுத்த தேர்தல்களில் அரசியல் கட்சிகள் போட்டிபோட்டுக்கொண்டு தங்கத்தின் அளவை உயர்த்தலாம் என்கிற கவலையையும் முன்வைத்துள்ளனர்.
முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருமாவளவன் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். “தங்க மோதிரம் வழங்குவதற்காகச் செலவு செய்யும் இந்த ரூ.755 கோடியைக் கொண்டு, அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் தனியார் மருத்துவமனைகளைப் போல் அனைத்து உயரிய வசதிகளையும் கொண்ட ‘பிரசவ வார்டுகளை’ உருவாக்குவதுடன், தேவையான மருத்துவப் பணியாளர்களையும் நியமிப்பது அனைத்து தரப்பினருக்கும் பயன் அளிப்பதாக அமையும்” என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.