அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் செய்த மேல்முறையீடு மனு இன்று உயர்நீமன்றத்தில் விசாரணை வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு தலைமையிலான அமர்வு விசாரித்து வந்த நிலையில் நேற்று அதன் தீர்ப்பு வெளியானது.
அந்த தீர்ப்பில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என அறிவித்த உயர்நீதிமன்றம், ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அதில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் அறிவித்தனர்.
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. எனவே தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.