ஆன்லைன் விளையாட்டுக்கான தடைச்சட்டம் செல்லும் - உயர்நீதிமன்றம் அதிரடி

Published on
Updated on
1 min read

அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுக்களை தடைசெய்து இயற்றப்பட்ட சட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு  இயற்றிய சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அப்போது விசாரணையில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை எனவும், திறமைக்கான விளையாட்டான ரம்மியை, அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக கருத முடியாது என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சார்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

அதேசமயம், சட்டம் கொண்டு வர அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், தற்கொலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பிறகே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, செப்டம்பர் மாதம் 13ம் தேதி, இந்த வழக்குகளின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிறைவேற்றப்பட்ட சட்டம் முழுமையாக ரத்து செய்ய முடியாது எனக்கூறி கோரிக்கையை நிராகரித்தனர். மேலும், அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன்  விளையாட்டுக்களை தடை செய்தது செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதிகள், திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். 

தொடர்ந்து, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடுவதற்கான வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com