நாளையோடு நிறைவு பெறும் புத்தகக் கண்காட்சி...

சென்னையில் நடைபெற்று வரும் 46-வது புத்தகக் கண்காட்சியின் 16-வது நாளான இன்று பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் விற்பனையில் களை கட்டி வருகிறது. நாவல் வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்களா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி தொகுப்பு உங்களுக்காக...
நாளையோடு நிறைவு பெறும் புத்தகக் கண்காட்சி...
Published on
Updated on
2 min read

இன்றைய காலத்தில் எவ்வளவுதான் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வெளியானாலும் நாவல் மீதான வாசகர்களின் ஆர்வம் தற்போது வரை குறைந்தபாடில்லை. ஒரு நாவல் நம்மை இந்த உலகத்தில் இருந்து வேறொரு கற்பனைக்கு அழைத்துச் செல்லும். சிறுகதை கூட, மனதில் சில்லென்ற ஒரு குளிர்ச்சியை உண்டாக்கும். 

கதைகளை வாசிப்பதில் ஆர்வம் கொண்ட மக்களுக்கு புத்தகக் கண்காட்சியின் குறிப்பிட்ட அரங்குகள் பொக்கிஷமாகவே திகழ்ந்து வருகின்றன. ஜெயகாந்தன், ஜெயமோகன், வைரமுத்து, கி.ராஜநாராயணன், வண்ணதாசன் போன்ற பிரபல எழுத்தாளர்களின் கை வண்ணத்தில் உருவான புத்தகங்களை வாங்கி செல்ல வாசகர்கள் குவிந்துள்ளனர். 

அரங்கு எண் 410-ல் மீனாட்சி புத்தக நிலையம் அமைந்துள்ளது. இதில் ஜெயகாந்தன் எழுதிய அத்தனை நூல்களும் கிடைக்கும் இடமாக இந்த அரங்கு உள்ளது. சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், பாரிசுக்கு போ, கழுத்தில் விழுந்த மாலை, சுந்தர காண்டம், ஒரு சொல் கேளீர் போன்ற அற்புதமான நூல்கள் காணக்கிடைக்கின்றன. 

அரங்கு எண் 314-ல் அன்னம் அரங்கில் காலத்தின் கதை சொல்லி என அனைவராலும் புகழப்படும், கி.ராஜநாராயணனின் ஏராளமான புத்தகங்கள் அமைந்துள்ளன. தனது எழுத்துக்கள் மூலம் பல்வேறு பரிணாமங்களை தொட்டுச் சென்ற கி.ரா.வின் கரிசல் கதைகள், கதை சொல்லி, வேட்டி, பேதை, பெண்மணம், மாயமான் போன்ற சிறுகதைகள், சாகித்திய அகாடமி விருது பெற்ற கோபல்லபுரத்து மக்கள் நாவல், அந்தமான் நாயக்கர் நாவல் உள்பட ஏராளமான நூல்கள் இந்த அரங்கில் கிடைக்கும். 

சந்தியா பதிப்பகம் அமைக்கப்பட்ட எஃப் 33-ல் கலாப்ரியா, மற்றும் வண்ணதாசன் ஆகியோரின் புத்தகங்கள் அதிகளவில் கிடைக்கின்றன. ஒளியிலே தெரிவது, கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள், சில இறகுகள், சில பறவைகள் போன்ற நூல்களை இங்கு அள்ளலாம். 

அரங்கு எண் 32-ல் பூ மழை தூவி, அன்பெனும் தோட்டத்திலே, வாழ்வு அன்பு மகிழ்ச்சி, இப்போதே பரசவம் போன்ற புத்தகங்களும், அரங்கு எண் எஃப்29-ல் ஜெயமோகன், ஜெயமோகன், வைரமுத்து, எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களின் முக்கிய படைப்புகள் இடம்பெற்றுள்ளன. 

ஜெயமோகனின் விஷ்ணுபுரம், அந்த முகில் இந்த முகில், ஞானி, விசும்பி, 7 கதிர் போன்ற நூல்கள், வைரமுத்துவின் ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும், கொடி மரத்தின் வேர்கள், சிரங்களை நோக்கி, நேற்று போட்ட கோலம் போன்ற நூல்களும், கி.ராஜநாராயணனின் நண்பர்களோடு நான், எஸ்.ராமகிருஷ்ணனின் தேசந்தரி, மண்டியிடுங்கள் தந்தையே, சித்திரங்களின் விசித்திரங்கள், தோ.பரமசிவனின் நீராட்டும் ஆராட்டும், போன்ற நூல்கள் வாசகர்களின் கைசேரத் துடிக்கின்றன. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com