வடபழனி ஆண்டவர் கோவில் சார்பாக தொடரப்பட்ட வழக்கு... காரணம் என்ன?!!

வடபழனி ஆண்டவர் கோவில் சார்பாக தொடரப்பட்ட வழக்கு... காரணம் என்ன?!!
Published on
Updated on
1 min read

சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாம்பலம் தாசில்தாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு என்ன?:

சென்னை, வடபழனி ஆண்டவர் திருக்கோவிலுக்கு சொந்தமாக சென்னையில் பல இடங்களில் நிலங்கள் உள்ளன. அந்த வகையில் சாலிகிராமம் வீரமாமுனிவர் தெருவில் உள்ள ஒரு ஏக்கர் 92 செண்ட் நிலத்தை அளவீடு செய்ய மாநகராட்சி மற்றும் மாம்பலம் தாசில்தாரருக்கு உத்தரவிடக் கோரி கோவில் துணை ஆணையர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2016ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ஆக்கிரமிப்புகளை அகற்ற:

கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஒரு பகுதி சாலை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், அந்த சாலையை அளவீடு செய்து எல்லை வரையறை செய்யவும், நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கூறி மாம்பலம் தாசில்தாரர், கோவிலுக்கும், மாநகராட்சிக்கும் 2016ம் ஆண்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நடவடிக்கை:

அந்த கடிதத்தில் வேறு ஒரு நிலம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதற்கும் கோவில் நிலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால் கோவில் நிலத்தை அளவீடு செய்யக் கோரி, மாநகராட்சிக்கும், தாசில்தாரருக்கும் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

உத்தரவு:

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தகுதியான சர்வேயரை கொண்டு கோவில் நிலத்தை அளவீடு செய்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாம்பலம் தாசில்தாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 26ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com