போலீசாருக்கு எதிராக எடப்பாடி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு...பதிலளிக்க உத்தரவிட்ட ஐகோர்ட்!

போலீசாருக்கு எதிராக எடப்பாடி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு...பதிலளிக்க உத்தரவிட்ட ஐகோர்ட்!
Published on
Updated on
1 min read

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட  எடப்பாடி  பழனிச்சாமி,  தனது தேர்தல் வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளதால், அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யும்படியும், இதுகுறித்து மே 26ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும், சேலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம்,  வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு,  இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாமென காவல்துறைக்கு அறிவுறுத்தியது.

எனினும் நீதிமன்ற உத்தரவை மீறி, சேலத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் தனது கணக்கு குறித்த விவரங்களை கேட்டுப் பெற்றுள்ளதாக கூறி, சேலம் மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளர் புஷ்பராணி, உதவி ஆய்வாளர் குணசேகர் ஆகியோருக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். தொடர்ந்து இந்த வழக்கானது, நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜலை 7-ஆம் தேதிக்குள் குற்றப்பிரிவு போலீசார் பதிலளிக்க வேண்டும் என இரு காவல் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com