"நாங்க போட்ட பிச்சை அது" - முற்றும் திமுக - காங்கிரஸ் மோதல் - விஜய் எனும் ஒற்றை மனிதரால் போர்க்களமாக மாறும் அரசியல் களம்!

"காங்கிரஸ் கட்சித் தேர்தலில் எங்கள் உழைப்பைச் சுரண்டியது"
congress tvk
Published on
Updated on
1 min read

தமிழக அரசியல் களம் தற்போது ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. 22 ஆண்டுகால திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைந்ததைத் தொடர்ந்து, இரு கட்சித் தலைவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிப் பேசி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ள நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது.

திமுகவின் செய்தித் தொடர்பாளர் சரவணன் இது குறித்துப் பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார். தற்போது காங்கிரஸிடம் உள்ள 5 சட்டமன்ற உறுப்பினர்களும் திமுகவின் தயவால் மட்டுமே வெற்றி பெற்றவர்கள் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது என்று அவர் சாடினார். "காங்கிரஸ் கட்சித் தேர்தலில் எங்கள் உழைப்பைச் சுரண்டியது" என்று குறிப்பிட்ட அவர், திமுகவின் பலத்தால்தான் காங்கிரஸ் தமிழகத்தில் இத்தனை காலம் உயிர்ப்புடன் இருந்தது என்றும், இப்போது அந்த நன்றியை மறந்து முதுகில் குத்தியுள்ளதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸின் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி மிகவும் ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார். "காங்கிரஸ்காரன் சுதந்திரத்திற்காகப் போராடி அதனை வாங்கித் தரவில்லை என்றால், நீங்கள் இன்று வெள்ளைச் சட்டை போட்டுக்கொண்டு திரிய முடியுமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், "நாங்கள் போட்ட பிச்சையில்தான் நீங்களே வாழ்கிறீர்கள்" என்று அவர் மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகால நட்பை மறந்து இரு தரப்பினரும் இப்படிப் பொதுவெளியில் மோதிக்கொள்வது தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நேரடி மோதல் தமிழக அரசியலில் ஒரு புதிய பிளவை உருவாக்கியுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்த கையோடு, திமுகவை காங்கிரஸ் இப்படித் தரக்குறைவாக விமர்சிப்பது, இனி வரும் காலங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்பதைக் காட்டுகிறது. திமுகவின் உழைப்பால் தான் காங்கிரஸ் வளர்ந்தது என்கிற வாதமும், காங்கிரஸ் வாங்கித் தந்த சுதந்திரத்தால் தான் திமுக இருக்கிறது என்கிற வாதமும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com