என்.ஐ.ஏ அதிகாரிகள் எனக்கூறி பணம் கொள்ளையடித்த கும்பல்...! போலீசார் வலைவீச்சு..!

என்.ஐ.ஏ அதிகாரிகள் எனக்கூறி பணம் கொள்ளையடித்த கும்பல்...! போலீசார் வலைவீச்சு..!
Published on
Updated on
2 min read

சென்னை முத்தியால்பேட்டை மலையப்பன் தெரு பகுதியில் தனது சகோதரர்களுடன் வசித்து வருபவர் ஜமால். இவர் பர்மா பஜார் பகுதியில் தனது சகோதரர்களுடன் சேர்ந்து செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு இன்று காலை வந்த 4 நபர்கள் ஜமாலிடம் தங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் எனக்கூறி, உங்கள் வீட்டை சோதனையிடவுள்ளதாகக் தெரிவித்துள்ளனர். மேலும், ஜமால் உள்ளிட்டோரின் செல்போன்களையும் வாங்கி வைத்து அந்த கும்பல் ஜமால் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். 

அதனைத் தொடர்ந்து பர்மா பஜாரில் உள்ள ஜமாலின் கடையிலும் அதே கும்பல் சோதனை நடத்தியுள்ளது. அதில் ஜமாலின் கடையில் இருந்து 10 லட்சம் ரூபாயும், வீட்டில் இருந்து 10 லட்சம் ரூபாயும் அந்த கும்பல் எடுத்துச் சென்றுள்ளது. 

இதற்கிடையே முத்தியால்பேட்டை மற்றும் பர்மா பஜார் பகுதிகளில் என்.ஐ.ஏ சோதனை நடந்துள்ளதாக கிடைத்த தகவல் அறிந்து முத்தியால்பேட்டை காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஜமால் வீடு மற்றும் கடையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் எனக்கூறி ஒரு கும்பல் போலியாக சோதனை நடத்தி 20 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. பின்னர் ஜமாலிடம் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோதே சோதனை நடத்திச் சென்றது உண்மையான என்.ஐ.ஏ அதிகாரிகள் இல்லை என்பது ஜமால் மற்றும் சகோதரர்களுக்கு தெரியவந்தது.

அதன் தொடர்ச்சியாக ஜமாலிடம் இச்சம்பவம் தொடர்பாக புகாரைப் பெற்று பூக்கடை துணை ஆணையர் தனிப்படை போலீசார் உதவியுடன், முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஜமால் மற்றும் சகோதரர்கள் ஹவாலா தொழிலில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜமால் மற்றும் சகோதரர்களின் வீடு, கடைகளில் பணப் புழக்கம் இருப்பதை அறிந்து மர்ம கும்பல் என்.ஐ.ஏ அதிகாரிகள் என்ற போர்வையில் வீட்டில் சோதனை நடத்திவிட்டு, பின்பு அந்த கும்பலில் வந்த இருவர் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஜமாலுடைய செல்போன் கடைக்கும் சென்று மொத்தம் 20 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளதும் தெரியவந்தது.  

இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் எனக்கூறி சோதனை நடத்தி பணத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். மேலும் கோவை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தொடர்ச்சியாக என்.ஐ.ஏ அதிகாரிகள் மண்ணடி, பூக்கடை உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி சோதனை நடத்தி வரும் சூழலில், இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட இந்த மோசடி கும்பல் என்.ஐ.ஏ அதிகாரிகள் போல நடித்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஜமால் மற்றும் சகோதர்கள் யாரேனும் ஆள் வைத்து சோதனை நாடகத்தை அரங்கேற்றி கொள்ளையடித்திருக்க வாய்ப்புள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com