ஆளுநரின் நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் - முதலமைச்சர் காட்டம்!

ஆளுநரின் நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் - முதலமைச்சர் காட்டம்!

Published on

அமலாக்கத்துறை வழக்கை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ள நிலையில், அவருக்கு அதற்கான அதிகாரம் கிடையாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், சென்னை மற்றும் கரூரில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.  இதில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் ஜுன் 14 ஆம் தேதி  செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து திடீர் நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி ஓமந்ததூரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு  பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  

இதைத்தொடர்ந்து அவர் வகித்த துறைகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு மாற்றப்பட்டன. துறைகளை மாற்ற ஒப்புதல் தெரிவித்த ஆளுநர் , செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை ஏற்கவில்லை என தெரிவித்திருந்தார். ஆனால், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. 

இந்நிலையில் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் அமலாக்கதுறை வழக்கில் செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளதால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மேலும் சில குற்ற வழக்குகள் மாநில காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருவதால், அமைச்சர்  குழுவில் செந்தில் பாலாஜி நீடிப்பது, நியாயமான விசாரணை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை எதிர்மறையாக பாதிக்கும் என்றும் ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே செந்தில் பாலாஜி பதவி நீக்கம் குறித்து சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என்றார்.  ஆளுநரின் இந்த நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com