
சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் தொல்லியல் துறை சார்பில் 'இரும்பின் தொன்மை' என்ற நூலினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டி, கீழடி இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்..
இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்புக் காலம் தொடங்கியதாகவும், உலக மானுட இனத்துக்கு தமிழ்நிலம் வழங்கும் மாபெரும் கொடை என்றே இதனை நாம் கம்பீரமாகச் சொல்லலாம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ் நிலத்தில் இருந்துதான் இந்தியாவின் வரலாறு எழுதப்பட வேண்டும் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை செய்து வருவதாகவும், தற்போதைய ஆய்வுகள் பல்வேறு திருப்பு முனைகளை உருவாக்கி வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டின் இரும்பின் அறிமுகம் 4 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை மயிலாடும்பாறை அகழாய்வின் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தின் வாயிலாக உலகிற்கு அறிவித்ததாக கூறிய முதலமைச்சர், உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என்பதை மெய்ப்பிக்க வேண்டிய கடமையை இந்த திராவிட மாடல் அரசு எடுத்துக் கொள்வதாகவும் கூறினார்.