தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைவதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தனிநீதிபதி குமரேஷ் பாபு இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தெரிவித்த நீதிபதி, ஓபிஎஸ் தரப்பில் அளிக்கப்பட்ட எதிர் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஈபிஎஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதால், இது ஓபிஎஸ்க்கு பின்னடைவு என்று அதிமுக தரப்பினர் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் தலைமையிலான அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம் சி சம்பத், எடப்பாடி பழனிச்சாமி இனி எந்த இடர்பாடும் இன்றி கட்சியின் வளர்ச்சிக்கு பணியாற்றுவார் என்றும், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைவதற்கான அடித்தளம் தான் தற்போது இடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.